Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது'

'மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது'

'மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது'

'மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது'

ADDED : ஆக 05, 2024 10:30 PM


Google News
பகர்கஞ்ச்:மாநில அரசின் ஆலோசனை இல்லாமல் டில்லி மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களை, துணை நிலை கவர்னர் நியமிக்கலாம் என, உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இது ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

டில்லி மாநகராட்சிக்கு 250 கவுன்சிலர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். 10 பேரை துணை நிலை கவர்னர் நியமிக்கிறார்.

கடந்த 2022 டிசம்பரில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடித்து, 15 ஆண்டுகால அதன் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆம் ஆத்மி 134 இடங்களிலும், பா.ஜ., 104 இடங்களிலும், காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் வெற்றி பெற்றன.

நியமன உறுப்பினர்கள் தொடர்பாக கவர்னருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை நியமிக்கும்போது, அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி துணை நிலை கவர்னர் செயல்பட உத்தரவி வேண்டும் என்று மனுவில் டில்லி அரசு கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதிக்குறிப்பிடாமல் கடந்த ஆண்டு மே 17ம் தேதி ஒத்திவைத்தது.

'மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை துணை நிலை கவர்னருக்கு வழங்கினால், தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமை அமைப்பை அவர் சீர்குலைக்க முடியும்' என, விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

டில்லி மாநகராட்சிக்கு, மாநில அரசின் ஆலோசனை மற்றும் கருத்து கேட்காமல் 10 உறுப்பினர்களை டில்லி கவர்னர் நியமிக்கலாம். உறுப்பினர்களை நியமிப்பது, சட்டப்பூர்வமான அதிகாரமே தவிர, நிர்வாக அதிகாரம் அல்ல.

டில்லி மாநகராட்சி சட்டப்படி, 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாநகராட்சியில் அனுபவம் பெற்ற 10 பேரை நியமிக்க துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. கவர்னருக்கான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

மாநில அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us