ADDED : ஜூன் 09, 2024 02:27 AM
புரோமோஷன் கிடைச்சுடுச்சு!
மாநில கேபிடல் சிட்டியில் இருக்கிற அசெம்பிளிக்கு நடந்த தேர்தலில் தோற்றவர், நாட்டின் கேபிடல் சிட்டியில் உள்ள செங்கோட்டைக்கு செல்ல புரோமோஷன் கிடைச்சிருக்கு.
இதுக்கு, எதிரிக்கட்சிக்காரங்களும் உதவினாங்களாம். அவங்களுக்கும் நன்றின்னு அவர் சொன்னதாலே, யார் யார் உதவினாங்க என்ற கேள்வி எழுந்திருக்கு.
இதில், மந்திரி ஒருத்தர், சந்தித்து பேசின தகவல் தான், பெருசா இருக்கு. சி.பல்லாப்பூரில் அசெம்பிளி தேர்தலில் தோற்று செங்கோட்டைக்கு புரோமோஷன் ஆன பூக்காரரின் வெற்றியின் பின்னணியில் கூட, அதே மந்திரியின் உதவி இருந்ததாக பேசுறாங்களே.
டோக்கன் அட்வான்ஸ்
கவர்மென்ட் மருத்துவமனையின் பெரிய அதிகாரம் உள்ள ஆபிசரு, தன்னை மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பெரிய டாக்டராக்க 30 லட்சம் ரூபாய் பேரம் பேசி பத்து லட்சம் 'டோக்கன் அட்வான்ஸ்' கொடுத்தாச்சாம்.
இன்னும் 20 லட்சம் ரூபாய் பேலன்ஸ் கொடுக்கணும். பணம் வாங்கினவர், ஆர்டர் இப்பவரும், அப்புறம் வரும்னு காலம் கடத்துறாராம். பேலன்ஸ் தொகை 20 லட்சம் ரூபாய் தயாராக இருக்குதுதாம். அதையும் கொடுத்து, ஏமாற வேணுமான்னு யோசிக்கிறாராம்.
இந்த தொகையை புரட்ட அவருக்கு ஒண்ணும் பெர்ய கஷ்டமே இல்லையாம். அவரே நடத்தும் ஆஸ்பத்திரி வரும் பேஷன்டுகளிடம் 'கன்சல்ட்' பேசி, அரசு ஆபரேஷன் தியேட்டரிலேயே 'ஆபரேஷன்' செய்ய பணம் பெறுவதாக சொல்றாங்க.
இவரு அரசு டாக்டரா அல்லது பிரைவேட் கிளினிக் டாக்டரான்னு தெரியல. பணம் பறிப்பது எப்படின்னு அரசியல் வாதிகளும் கூட, இவரிடம் நிறைய கத்துக்கலாம் என்கிறாங்க.
முகமூடி ராஜ்ஜியம்
கோல்டு சிட்டியில் வீடு புகுந்து திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. 'சிசிடிவி' கேமராவிலும் இதன் காட்சிகள் பதிவாகி உள்ளன.
புகார்கள் போனாலும் இதுவரையில் யாரையும் பிடிச்சதா தெரியல. பதுங்கி பயந்து இருந்தவங்க, அட்டகாசம் தலை துாக்கி இருக்குது.
சட்டம் - ஒழுங்கை காப்பாத்த வேண்டியவங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பதால் தான் முகமூடி திருடர்கள் ராஜ்ஜியம் சிட்டியில் ஆட்டம் போடுது.
இதுக்கு தானா ஆசை?
தனிப்பட்ட ஒரு பள்ளி மீது மட்டுமே புகார்கள் சொல்றவங்க, மற்ற பள்ளிகளில் குறைகளே இல்லையான்னு யோசிக்கலையா.
தனிப்பட்ட ஒரு மதத்தினரின் பள்ளியை மிரட்டி அடக்க சூழ்ச்சியான்னு பேச தொடங்கி இருக்காங்க. புகார், நேர்மையாக கூட இருக்கலாம். அதனால் என்ன பலன், என தெரியலயே.
கோலாரில் இருந்து பெரிய ஆபிசர் வந்தார்; பார்த்தார்; கவனிக்க வேண்டியதை கவனித்தார். அவருக்கும் சேர வேண்டியது சேர்ந்தது. வந்த வேலை முடிஞ்சது. இதுக்கு தானா, புகார் செய்தவங்க ஆசை பட்டாங்க.