பால் லாரி மீது வேகமாக மோதிய பஸ் உ.பி.,யில் 18 பேர் பலி; 20 பேர் காயம்
பால் லாரி மீது வேகமாக மோதிய பஸ் உ.பி.,யில் 18 பேர் பலி; 20 பேர் காயம்
பால் லாரி மீது வேகமாக மோதிய பஸ் உ.பி.,யில் 18 பேர் பலி; 20 பேர் காயம்
ADDED : ஜூலை 11, 2024 01:17 AM

உன்னாவ், உத்தர பிரதேசத்தில் பால் லாரி மீது, 'டபுள் டெக்கர்' பஸ் அதிவேகமாக மோதியதில்,18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயமடைந்தனர்.
உ.பி.,யின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில், 50க்கும் மேற்பட்ட பயணியருடன் டபுள் டெக்கர் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது.
பெஹ்தா முஜாவர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட ஜோஜிகோட் என்ற கிராமம் அருகே, அதிகாலை 5:00 மணி அளவில் பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற பால் லாரி மீது அதிவேகமாக மோதியது.
விசாரணை
இதில், பஸ் டிரைவர், லாரி டிரைவர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால், பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர் துாங்கிக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், விபத்தில் உருகுலைந்த இரு வாகனங்களையும், கிரேன் வாயிலாக அவர்கள் அப்புறப்படுத்தினர். இதனால், ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து, கலெக்டர் கவுரங் ரதி கூறியதாவது:
பீஹாரின் மோதிஹாரி பகுதியில் இருந்து, தலைநகர் டில்லியை நோக்கி சென்ற பஸ், பால் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், 14 ஆண்கள், மூன்று பெண்கள், ஒரு குழந்தை உயிரிழந்தனர்.
இதில், பஸ் மற்றும் லாரி டிரைவர்களும் அடங்குவர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இழப்பீடு
மத்திய அரசின் சார்பில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கும்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பணம் எங்கு செல்கிறது?
விபத்து நடந்த போது, நெடுஞ்சாலை போலீசார் எங்கே இருந்தனர்? வழக்கமான ரோந்து பணிக்கு செல்லவில்லையா? விபத்துக்குப் பின், நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ் சேவை வருவதற்கு எவ்வளவு நேரமானது? விரைவுச்சாலையில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பணம் எங்கு செல்கிறது? பா.ஜ., அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி