ஹோலி கொண்டாட கட்டுப்பாடு தெலுங்கானா அரசு வீம்பு।
ஹோலி கொண்டாட கட்டுப்பாடு தெலுங்கானா அரசு வீம்பு।
ஹோலி கொண்டாட கட்டுப்பாடு தெலுங்கானா அரசு வீம்பு।
ADDED : மார் 14, 2025 01:19 AM
ஹைதராபாத் தெலுங்கானாவில் ஹோலி கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ஹிந்து விரோத போக்குடன் காங்கிரஸ் அரசு செயல்படுவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவுகளை சைபராபாத், ரச்சகொண்டா உட்பட, அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் வாயிலாக தனித்தனியாக அரசு பிறப்பித்தது.
அதில், 'தெருக்களில் பைக் உள்ளிட்ட வாகனங்களில் கும்பலாக செல்லக்கூடாது; பொது இடங்களில் விருப்பமில்லா நபர்கள் மீதோ, அவர்களின் வாகனங்கள் மீதோ வண்ணப் பொடியையோ, தண்ணீரையோ தெளிக்கக் கூடாது; இவை போன்ற செயல்கள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. தேவையின்றி பைக்கில் சுற்றக்கூடாது. நேற்று மாலை 6:00 மணி துவங்கி, நாளை காலை 6:00 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்' என கூறப்பட்டுள்ளது.
இதுபோல மதுக் கடைகள், மதுக் கூடங்களுடன் கூடிய ஹோட்டல்கள் ஆகியவற்றை இன்று காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மூடவும் உத்தரவிடப்பட்டது. ஹோலி கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில், இது போன்ற கட்டுப்பாடுகளை தெலுங்கானா காங்கிரஸ் அரசு விதிப்பதாக பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. ''ஹிந்துக்கள் எப்படி ஹோலி கொண்டாடுவர்?'' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா கேட்டுள்ளார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜா சிங் கூறுகையில், ''நிஜாம் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்களுக்கு தொல்லை கொடுத்தது போலவே, தற்போதைய காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டியும் 'ஒன்பதாவது நிஜாம்' போல் ஆட்சி செய்கிறார்.
''ரம்ஜான் மாதம் முழுதும் இரவு நேரத்தில் எவ்வளவு சுதந்திரமாக பைக்கில் சுற்றுகின்றனர் என முதல்வரிடம் கேட்கிறேன். அவரும், அவரது போலீசாரும் உண்மையானவர்களாக இருந்தால், ஹோலியன்று ஒரு நாள் மட்டும், ஹிந்து சகோதரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்,'' என்றார்.