Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சிறு தானியங்கள் பயிரிட பெண்களை ஊக்குவிக்கும் 'தலைவி'

சிறு தானியங்கள் பயிரிட பெண்களை ஊக்குவிக்கும் 'தலைவி'

சிறு தானியங்கள் பயிரிட பெண்களை ஊக்குவிக்கும் 'தலைவி'

சிறு தானியங்கள் பயிரிட பெண்களை ஊக்குவிக்கும் 'தலைவி'

ADDED : ஜூன் 02, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
பெண்கள் இன்று அனைத்துத் துறைகளிலும், தங்கள் கால்தடத்தை பதிக்க ஆரம்பித்துவிட்டனர். 'எங்களால் முடியாதது, எதுவும் இல்லை' என, ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளும் செய்ய ஆரம்பித்து உள்ளனர். பெண்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வைக்க, சிறு தானியங்களை பயிரிட ஒரு பெண் ஊக்குவித்து வருகிறார்.

தார்வாடின் குந்த்கோல் தாலுகா தீர்த்தா கிராமத்தைச் சேர்ந்தவர் பீபீஜான், 45. இவருக்கு சிறுதானியங்களை பயிரிட்டு வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது.

இதுபற்றி அறிந்த 'சஹஜா சம்ரிதா' என்ற கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதி கிருஷ்ண பிரசாத், 'சிறுதானியங்களை பயிரிட்டு வளர்த்து, அதை எங்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்து, லாபம் ஈட்டுங்கள்' என்றார் அவரிடம்.

இதையடுத்து பீபீஜானும், கூட்டுறவு சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். தற்போது தீர்த்தா கிராமத்தில் செயல்படும், சஹஜா சம்ரிதா கூட்டுறவு சங்க தலைவியாக உள்ளார்.

தீர்த்தா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, பெண்களை சந்தித்துப் பேசுகிறார். சிறு தானியங்ளை பயிரிட்டு, அவற்றை வளர்த்து விற்பனை செய்து தொழில் முனைவோர் ஆகுங்கள் என, பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசுகிறார்.

இதனால் அந்த சங்கத்தில், தற்போது 15 பெண்கள் இணைந்து உள்ளனர். அவர்கள் பயிரிடும் சிறு தானியங்களை, கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். சிறு தானியங்கள் பேக்கிங் செய்யப்பட்டு, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுபற்றி பீபீஜான் கூறியதாவது:

விவசாய துறையிலும் பெண்கள் தங்கள் சக்தியை காட்ட வேண்டும் என்பது என் ஆசை. திருமணமாகி வேலைக்கு செல்லாமல் இருக்கும் பெண்கள் தங்கள் கை செலவுக்கு கணவர், அவரது குடும்பத்தினரை எதிர்நோக்கி இருக்க வேண்டி உள்ளது. ஆனால் சிறு தானிய பயிர்களை பயிரிட்டு, அதை விற்றால் அதன்மூலம் அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

சில இடங்களில் பெண்களை வெளியே அனுப்புவதற்கு கணவர், அவரது குடும்பத்தினர் மறுக்கின்றனர். நான் நிறைய பெண்களின் கணவர்களிடம் பேசி, அவர்களின் மனைவியர் தொழில்முனைவோர் ஆக உதவி செய்து உள்ளேன். பெண்கள் கையிலும் காசு இருந்தால் தான், அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தது போன்றது.

சிறு தானியங்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தால், பெண்கள் மகிழ்ச்சி அடைவதை பார்க்கும் போது, எனக்கு சந்தோஷமாக உள்ளது. பெண்களுக்கும் கனவு, ஆசை நிறைய இருக்கும். அதை நிறைவேற்ற பெற்றோர், கணவர் குடும்பத்தினர் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us