'சகுனி' வேலைக்கு வெற்றி? கோலார் காங்கிரசார் கொதிப்பு!
'சகுனி' வேலைக்கு வெற்றி? கோலார் காங்கிரசார் கொதிப்பு!
'சகுனி' வேலைக்கு வெற்றி? கோலார் காங்கிரசார் கொதிப்பு!
ADDED : ஜூன் 03, 2024 04:03 AM
தங்கவயல் : முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், சீனிவாச கவுடா ஆகியோருக்கு மேலவை தேர்தலில் வாய்ப்பு வழங்க கூடாதென்று கர்நாடக உணவுத் துறை அமைச்சர் முனியப்பா, டில்லியில் முகாமிட்டு 'சகுனி' வேலை பார்த்து சாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் கோலார் தொகுதிக்கு முனியப்பாவின் மருமகன் சிக்கபெத்தண்ணாவுக்கு 'சீட்' வழங்க கூடாதென்று கடுமையாக எதிர்த்தவர்களில் முக்கியமானவர், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார். இதனால், பெத்தண்ணாவுக்கு சீட் கை நழுவி போனது.
இது போன்று, கோலாரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சீனிவாச கவுடாவும் முயற்சி செய்தார். இவரும், முனியப்பாவின் எதிர்ப்பாளர்.
இதனால் பழிக்கு பழி வாங்க, சமீபத்தில் உணவு அமைச்சர் முனியப்பா டில்லியில் தங்கினார்.
மேலிடத் தலைவர்களை சந்தித்தார். எம்.எல்.சி., பதவி கொடுக்கக்கூடாது என முரண்டு பிடித்தார்.
இவர்களின் மோதலில், நேற்று வெளியான மேலவை வேட்பாளர் பட்டியலில், கோலார் மாவட்டத்தில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏற்கனவே கோலார் மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், முனியப்பா தவிர மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற வருத்தம் பலருக்கும் உண்டு.
இந்நிலையில் ரமேஷ் குமாருக்கு மேலவைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால், காங்கிரசில் மேலும் விரிசல் ஏற்படலாம். கட்சித் தாவலுக்கு சிலர் முற்படலாம் என தெரிகிறது.