சோலார் பேனல் பம்ப் செட்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் உயர்வு
சோலார் பேனல் பம்ப் செட்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் உயர்வு
சோலார் பேனல் பம்ப் செட்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் உயர்வு
ADDED : ஜூன் 25, 2024 05:08 AM
பெங்களூரு, : விவசாய பம்ப் செட்களுக்கு, 'சோலார் பேனல்' அமைக்கும் பிரதமரின் 'குசும்' திட்டத்துக்கு, கர்நாடக விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு மானியத்தை 30 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக உள்ளது விவசாயம். ஆனால் விவசாய பம்ப் செட்களுக்கான போதிய மின்சாரம் கிடைக்காமல், சிரமப்படுகின்றனர். விவசாயிகளின் நலனுக்காக, 2019ல் பிரதமர் 'குசும்' திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம், கர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 7,000 விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு சோலார் பம்ப் செட்களை நிறுவி உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 16,300 விவசாயிகள், இத்திட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதற்கு, மத்திய அரசு, 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. அத்துடன், விவசாயிகளுக்கு பம்ப், மீட்டர், குழாய்கள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்துக்கு மாநில விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்து வருவதால், பம்ப் செட் விலையில், 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை மானியம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், மத்திய அரசு 30 சதவீதம், மாநில அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும். விவசாயிகள் 20 சதவீதத்தொகை செலுத்தி, பம்ப் செட்களை விவசாயிகள் பெறலாம். மூன்று, ஐந்து, ஏழு, 10 ஹெச்.பி., திறன் அளவில் மானியம் வழங்கப்படுகிறது.
ஆர்வம் உள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் எண், ஆர்.டி.சி., நகல், வங்கி விபரங்களுடன், https://souramitra.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதில் ஏதாவது சிக்கல் இருந்தாலோ, தகவல் பெற நினைத்தாலோ, 080 - 2220 2100 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.