சமூக வலைதள பிரபலம் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி
சமூக வலைதள பிரபலம் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி
சமூக வலைதள பிரபலம் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி
ADDED : ஜூலை 19, 2024 01:13 AM

ராய்கட்: சுற்றுலா குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு பிரபலமடைந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண், நீர்வீழ்ச்சியில் படம் எடுத்தபோது, 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி காம்தார், 26. இவர் சமூக வலைதளத்தில், சுற்றுலா தலங்கள் குறித்து பல பதிவுகளை வெளியிட்டு பிரபலமடைந்தவர். குறிப்பாக மழைக்கால சுற்றுலா தலங்கள் தொடர்பான தகவல்களை அதிகம் பதிவிட்டுள்ளார். இவருடைய சமூக வலைதளக் கணக்கை பலரும் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், ராய்கடில் உள்ள புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சிக்கு, ஏழு நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். நேற்று காலை நீர்வீழ்ச்சி பகுதியில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, தவறி அருகில் உள்ள பள்ளத்தில் ஆன்வி விழுந்தார்.
உடன் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி, உள்ளூர் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்தனர். இதைத் தவிர, கடலோர காவல்படை உள்ளிட்டோரும் வரவழைக்கப்பட்டனர்.
செங்குத்தான 300 அடி பள்ளத்தில், ஒரு மரத்தின் கிளையில் அவர் சிக்கியிருந்தார். மீட்புப் படையினர் ஆறு மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.