ஷிகாவி சீட்டுக்கு காங்.,கில் போட்டி கட்சியினருக்கு சதீஷ் எச்சரிக்கை
ஷிகாவி சீட்டுக்கு காங்.,கில் போட்டி கட்சியினருக்கு சதீஷ் எச்சரிக்கை
ஷிகாவி சீட்டுக்கு காங்.,கில் போட்டி கட்சியினருக்கு சதீஷ் எச்சரிக்கை
ADDED : ஜூலை 05, 2024 06:25 AM

ஹாவேரி: ஷிகாவி தொகுதி சீட்டுக்கு, காங்கிரசில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மோதல், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹாவேரியின் ஷிகாவி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த பசவராஜ் பொம்மை, இம்முறை லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் எம்.பி.,யாகி தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். இதனால், ஷிகாவி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேர்தல் நடக்க உள்ளது.
ஷிகாவி தொகுதியில், காங்கிரஸ் சீட்டுக்கு யாசிர் கான் படான், அஜ்ஜம்பீர் காத்ரி இடையே பலத்த போட்டி எழுந்துள்ளது. அவரவர் ஆதரவு தலைவர்கள் மூலமாக நெருக்கடி கொடுக்கின்றனர். தங்களுக்கே சீட் கொடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கின்றனர்.
பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ், நேற்று முன்தினம், ஹாவேரியின் விருந்தினர் இல்லத்தில், யாசின்கான் படான், அஜ்ஜம்பீர் காத்ரி, ராஜு கன்னுர், சோமண்ணா பேவினமரா, சங்கர் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். 'சீட்டுக்காக முட்டி மோத வேண்டாம்' என, எச்சரித்தார்.
மேலும், 'ஷிகாவி தொகுதி இடைத்தேர்தலில், நாம் வெற்றி பெற வேண்டும். இப்படியே சண்டை போட்டால், வெற்றி பெறுவது கஷ்டம். இன்னும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை; அதற்குள் நீங்கள் இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது.
நீங்கள் இதுபோன்று நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. இத்தகைய பிரச்னைகளால் கட்சி தோற்கும். கட்சியில் ஒழுங்கின்றி நடந்து கொள்வது சரியல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து, தேர்தலை சந்திக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
காங்கிரசில் சீட்டுக்காக எழுந்துள்ள மோதல், பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், திறமையான வேட்பாளரை பா.ஜ., தேடுகிறது.