சதீஷ் - லட்சுமண் இணைந்து செயல்படுங்கள் ! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விருப்பம்
சதீஷ் - லட்சுமண் இணைந்து செயல்படுங்கள் ! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விருப்பம்
சதீஷ் - லட்சுமண் இணைந்து செயல்படுங்கள் ! அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விருப்பம்
ADDED : ஜூலை 07, 2024 03:06 AM

பல்லாரி: ''அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியும் இணைந்து செயல்பட வேண்டும்,'' என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பெலகாவி அரசியலில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளி, அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி ஆகிய இருவருக்கும் இடையே 'நீயா, நானா' போட்டி உள்ளது.
முற்றிய மோதல்
லோக்சபா தேர்தலில் சிக்கோடி தொகுதிக்கு உட்பட்ட அதானி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட, பா.ஜ., வேட்பாளர் கூடுதல் ஓட்டு வாங்கியதால், லட்சுமண் சவதியை, சதீஷ் ஜார்கிகோளி விமர்சித்தார்.
இதற்கு பதிலடியாக, 'சதீஷ் மீது கட்சி மேலிடத்திலும் புகார் அளிப்பேன்' என, லட்சுமண் சவதி கூறியதால் இருவருக்கும் இடையில் மோதல் முற்றியது.
இந்த விவகாரம் தொடர்பாக, பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பல்லாரியில் நேற்று அளித்த பேட்டி:
பெலகாவி காங்கிரசில் உட்கட்சி பூசல் இல்லை. அமைச்சர் சதீஷ் ஜார்கிகோளியும், எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியும் மூத்த தலைவர்கள். அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து பேசும் அளவுக்கு நான் பெரிய நபர் இல்லை. கட்சியின் சாதாரண சிப்பாய்.
பா.ஜ., குற்றச்சாட்டு
கட்சி மேலிடம் சொல்வதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தங்களது ஆட்சியில் எஸ்.சி., - - எஸ்.டி., சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு காங்கிரஸ் அரசு பயன்படுத்துவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2013- - 2018ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, எஸ்.சி., -- எஸ்.டி., சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பா.ஜ., வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியது.
வாக்குறுதித் திட்டங்கள் மூலம் எஸ்.சி., -- எஸ்.டி., சமூக மக்களும் பயனடைந்து வருகின்றனர். இதை பா.ஜ., தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.