சமாஜ்வாதி எம்.பி., தண்டனை ரத்து பதவியில் தொடர கோர்ட் உத்தரவு
சமாஜ்வாதி எம்.பி., தண்டனை ரத்து பதவியில் தொடர கோர்ட் உத்தரவு
சமாஜ்வாதி எம்.பி., தண்டனை ரத்து பதவியில் தொடர கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 30, 2024 02:00 AM

அலாகாபாத் : கடந்த 2005ல் பா.ஜ., - எம்.எல்.ஏ., கொல்லப்பட்ட வழக்கில் எம்.பி., அப்சல் அன்சாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
உத்தர பிரதேசத்தில், 2005ல் பா.ஜ., - எம்.எல்.ஏ., கிருஷ்ணானந்த் ராய் படுகொலை செய்யப்பட்டார்.
தகுதி நீக்கம்
இது தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. அப்சல் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் முக்தார் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த காஜிப்பூர் சிறப்பு நீதிமன்றம், 2023ல் குண்டர் சட்ட வழக்கில் சகோதரர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் முக்தார் இறந்ததை அடுத்து, அப்சல் மட்டும் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இதன்படி, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் அன்சாரியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.
கடந்த 2023ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து அப்சல் விடுவிக்கப்பட்டார்.
வழக்கில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்சல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், அப்சலின் மேல்முறையீடு மனுவை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேல்முறையீடு
இதையடுத்து, அப்சலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
அதில், அவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, அப்சல் அன்சாரி எம்.பி., பதவியில் தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.