கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.11 கோடி பரிசு; மஹாராஷ்டிரா அரசுக்கு கடும் எதிர்ப்பு
கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.11 கோடி பரிசு; மஹாராஷ்டிரா அரசுக்கு கடும் எதிர்ப்பு
கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.11 கோடி பரிசு; மஹாராஷ்டிரா அரசுக்கு கடும் எதிர்ப்பு
UPDATED : ஜூலை 07, 2024 04:59 AM
ADDED : ஜூலை 07, 2024 01:47 AM

மும்பை, டி - 20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மஹாராஷ்டிரா அரசு 11 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்ததை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாராட்டு
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில், டி - 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்கள் சூர்ய குமார் யாதவ், சிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோரை நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா தலைமை செயலகத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கவுரவித்து பாராட்டினார்.
அப்போது அவர், 'உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மஹாராஷ்டிரா அரசு சார்பில் 11 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, அறிவித்தார்.
இதற்கு, உத்தவ் சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
இது தொடர்பாக மஹாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வாதேட்டிவர் கூறுகையில், “மாநில அரசின் கருவூலத்தில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கு ஏன் பரிசு அளிக்க வேண்டும்? இதன் வாயிலாக, மாநில அரசின் கருவூலத்தை காலியாக்கும் முயற்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது,” என்றார்.
மகிழ்ச்சி
இதேபோல் உத்தவ் சிவசேனாவின் மேலவை உறுப்பினர் அம்பாதாஸ் தான்வே கூறுகையில், “உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் சாதனையை அனைவரும் பாராட்டி, பரிசளித்து வருகின்றனர். எனவே, மாநில அரசின் கருவூலத்தில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கு பரிசளிக்க வேண்டிய தேவை இல்லை.
''அதற்கு பதிலாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தன் சட்டைப் பையில் இருந்து பரிசுத்தொகையை அளிக்கலாம்,” என்றார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ., மேலவை உறுப்பினர் தாரேகர் கூறுகையில், “நாடு முழுதும், இந்திய அணியின் வெற்றியை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்க்கின்றனர்,” என்றார்.