கேரள கார் ஷோரூம்களில் ரூ.102 கோடி கருப்பு பணம் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு?
கேரள கார் ஷோரூம்களில் ரூ.102 கோடி கருப்பு பணம் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு?
கேரள கார் ஷோரூம்களில் ரூ.102 கோடி கருப்பு பணம் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு?
ADDED : ஜூலை 07, 2024 01:29 AM
திருவனந்தபுரம் : கேரளாவில் கார் ஷோரூம்களில், 102 கோடி ரூபாய் கருப்புப் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
விற்பனை
கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர் முஜிப் ரகுமான். இவருக்கு திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் உள்ளன.
'ராயல் டிரைவ்' என்ற பெயரில் இயங்கி வரும் இந்த ஷோரூம்களில் சாதாரண கார்கள் முதல் விலை உயர்ந்த கார்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மிக முக்கிய பிரமுகர்கள், தாங்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் பயன்படுத்திய கார்களை, இங்கு விற்றுச் செல்வதும், அதை இங்குள்ள ஊழியர்கள் மறுமுறை விற்பனை செய்வதும் இந்த ஷோரூம்களில் நடந்து வருகிறது.
இங்கு கருப்பு பணம் பரிவர்த்தனை நடப்பதாக கோழிக்கோடு வருமான வரித் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த இரு தினங்களாக முஜிப் ரகுமானுக்கு சொந்தமான அனைத்து கார் ஷோரூம்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், 102 கோடி ரூபாய்க்கு கருப்புப் பணம் வாயிலாக பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி கணக்கு வழக்குகளில் வேறு சில முறைகேடுகள் நடந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
குறிப்பாக, கார்களை விற்கும் வி.ஐ.பி.,க்களுக்கு கருப்பு பணம் வாயிலாக தொகை வழங்கப்பட்டதும், ஒரு சில வாடிக்கையாளர்களிடம் கருப்புப் பணம் வாயிலாக ரூபாய் பெற்றதும் அம்பலமானது.
மோசடி
அதாவது, முறையாக கணக்கில் காட்டப்படாமல் இந்த பண பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இந்த மோசடியில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர், தமிழ் மற்றும் மலையாள திரைத் துறையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இது குறித்து விளக்கமளிக்க அவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.