ராமர் கோவிலில் மழைநீர் கசிவு அறக்கட்டளை நிர்வாகி மறுப்பு
ராமர் கோவிலில் மழைநீர் கசிவு அறக்கட்டளை நிர்வாகி மறுப்பு
ராமர் கோவிலில் மழைநீர் கசிவு அறக்கட்டளை நிர்வாகி மறுப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:27 AM

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலில், கடந்த ஜன., 22ம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதன்பின், சமீபத்தில் முதல் முறையாக அந்த பகுதியில் மழை பெய்தது.
அப்போது, கோவிலில் பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டதாகவும், கர்ப்ப கிரகத்தின் மேற்கூரையில் தண்ணீர் புகுந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இது குறித்து கோவில் கட்டுமானத்தை கண்காணிக்கும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
ராமர் கோவில் கூரையில் இருந்து நீர் கசிந்ததாகவும், கர்ப்ப கிரகத்துக்குள் தண்ணீர் புகுந்ததாகவும் செய்தி கள் வெளியாயின. இதில் எந்த உண்மையும் இல்லை.
குழந்தை ராமர் சிலை இடம்பெற்றுள்ள கர்ப்ப கிரகத்தில், ஒரு சொட்டு தண்ணீர் கூட கூரையில் இருந்து கசியவில்லை. மற்ற எந்தப் பகுதியில் இருந்தும் கர்ப்ப கிரகத்துக்குள் தண்ணீர் வரவில்லை.
இந்த கோவில் முழுக்க முழுக்க இரும்பு இல்லாமல், கற்களால், நாகரா கட்டுமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், நீர்க்கசிவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால், உண்மை தெரியாமல் தவறான செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில், ஸ்வாமி நாராயண் கோவில்கள் மட்டும் முழுக்க கற்களால் கட்டப்பட்டுள்ளன. அதன்பின், நாகரா பாரம்பரிய முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.