Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வாக்குறுதி திட்ட அமலாக்க குழு விவகாரம்: கவர்னரிடம் எதிர்க்கட்சியினர் மனு

வாக்குறுதி திட்ட அமலாக்க குழு விவகாரம்: கவர்னரிடம் எதிர்க்கட்சியினர் மனு

வாக்குறுதி திட்ட அமலாக்க குழு விவகாரம்: கவர்னரிடம் எதிர்க்கட்சியினர் மனு

வாக்குறுதி திட்ட அமலாக்க குழு விவகாரம்: கவர்னரிடம் எதிர்க்கட்சியினர் மனு

ADDED : மார் 13, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: வாக்குறுதித் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், மதியம் வரை சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனால் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு வழங்கினர்.

கர்நாடகாவில் வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றும் குழுவில், காங்கிரசார் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று முன்தினம் சட்டசபையில் சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்தினர்.

நேற்று காலை, விதான் சவுதா வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கெங்கல் ஹனுமந்தையா சிலை முன், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது விஜயேந்திரா பேசியதாவது:

அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு தயாரிக்கும் சமையல்காரர்கள், செவிலியர்கள், ஆஷா சுகாதார ஊழியர்களின் கவுரவ நிதியை மாநில அரசு உயர்த்தவில்லை.

ஆனால், வாக்குறுதித் திட்டத்தை நிறைவேற்றும் குழுக்களில் காங்கிரசாரை நியமித்து, மக்களின் வரி பணத்தை முதல்வர் சித்தராமையா வீணடிக்கிறார். தொகுதி, மாவட்டம், மாநில அளவில் கட்சியினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கேபினட் அந்தஸ்துடன் லட்சக்கணகில் சம்பளமும் வழங்கப்படும்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.,க்களின் மகன்கள் வாக்குறுதித் திட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டங்களை அமல்படுத்த, மாவட்ட கலெக்டர்கள், தாசில்தார்கள் இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.

காலை சட்டசபை கூடிய பின், மீண்டும் சபாநாயகர் இருக்கை முன், எதிர்க்கட்சியினர் கூடி, வாக்குறுதித் திட்ட குழுவில் காங்கிரசார் சேர்க்கப்பட்டதற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அப்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சபாநாயகர் காதர்: சபை நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: வாக்குறுதித் திட்டங்களை அமலாக்கும் குழுத் தலைவர், துணைத்தலைவரின் சம்பளம், மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்களை நியமிப்பதன் மூலம், எம்.எல்.ஏ.,க்களை அரசு அவமானப்படுத்துகிறது. அரசு திட்டக்குழுவில் கட்சி உறுப்பினர்களை நியமித்து, ஊதியம் கொடுப்பது சட்ட விரோதம்.

சபாநாயகர்: இந்த பிரச்னை நேற்று முன்தினம் முதல் சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து வருகிறது. இது மாநில நலனுக்கு நல்லதல்ல. பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில், மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதம் செய்து, பரிசீலிக்க வேண்டும்.

எனவே, இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். எதிர்க்கட்சிகளின் அமளி, முடிவுக்கு வர வேண்டும். எனவே, சபை மதியம் 1:45 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுகிறது.

பா.ஜ., உறுப்பினர்கள், ஊர்வலமாக ராஜ்பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து மனுக் கொடுத்தனர்.

மீண்டும் மதியம் சபை கூடியபோது, முதல்வர் சித்தராமையா வருகை தந்திருந்தார். எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது:

கூட்டத்தொடர் முடிந்தவுடன், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவேன். உரிமை மீறலோ, அவமரியாதையோ இருக்காது என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர்: எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்துவதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார். எனவே, உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்கு செல்லுங்கள்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்கு சென்றனர்.

� கெங்கல் ஹனுமந்தையா சிலை முன் போராட்டம் நடத்திய பா.ஜ., - ம.ஜ.த.,வினர். �கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us