ADDED : ஜூலை 02, 2024 09:33 PM
மங்களூரு : மங்களூரு சிறையில் இரு கோஷ்டிகளாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டனர். இந்த மோதலில், இரண்டு கைதிகள் படுகாயம் அடைந்தனர்.
மங்களூரு, கொடியால்பைலு பகுதியில், மாவட்ட சிறை உள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி டோபி நவ்பல், அவரது கூட்டாளிகள் முகமது சமீர், 30, முகமது மன்சூர், 30, சிறையில் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு டோபி நவ்பல்லுக்கும், சிறையில் உள்ள இன்னொரு ரவுடியான இப்ராஹிமுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
டோபி நவ்பல்லை, இப்ராஹிமும், அவரது கூட்டாளிகளுமான முபாத் ரிபாத், 28, முகமது ரிஸ்வான், 34, உமர் பாரூக் இர்பான், 34, அல்தாப், 35, ஆகியோர் தாக்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது சமீர், முகமது மன்சூர் ஆகியோர் டோபி நவ்பல்லை காப்பாற்ற முயன்றனர். இதனால் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
உணவு சாப்பிட வழங்கப்படும் தட்டுகளை, கூர்மையான ஆயுதம் போல் வடிவமைத்து தாக்கியதில், முகமது சமீர், முகமது மன்சூர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மங்களூரு வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் குறித்து, சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, பர்கே போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.