ஆக்ரா அருகே கைதி மரணம்: போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்
ஆக்ரா அருகே கைதி மரணம்: போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்
ஆக்ரா அருகே கைதி மரணம்: போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்
ADDED : ஜூன் 22, 2024 04:42 PM
பிரோசாபாத்: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த கைதி மரணம் அடைந்ததால், கிராம மக்கள் போலீஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீஸ் வாகனத்துக்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
உ.பி., மாநிலம் பிரோசாபாத் நகரில் பைக் திருடிய வழக்கில் ஆகாஷ்,25, என்ற வாலிபர் கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பிரோசாபாத் மாவட்ட சிறையில் ஆகாஷ் 19ம் தேதி அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறைக்குள் ஆகாஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை டாக்டர்கள் பரிந்துரைப்படி பிரோசாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் 20ம் தேதி ஆகாஷ் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின் அன்று மாலையில் குடும்பத்தினரிடம் ஆகாஷ் உடல் ஒப்படைக்கபட்டது. ஆகாஷ் வீடு அமைந்துள்ள நாக்லா பச்சியா கிராம மக்கள் ஆகாஷ் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
போலீசுக்கு எதிராக கோஷமிட்ட கிராம மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஆகாஷை போலீஸ்காரர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள், போலீஸ் வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். போலீசார் தடியடி நடத்தி கிராம மக்களை அப்புறப்படுத்தினர். காயம் அடைந்த போலீஸ்காரர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.