பிரதமரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் அஜித் தோவல், மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு
பிரதமரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் அஜித் தோவல், மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு
பிரதமரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் அஜித் தோவல், மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு
UPDATED : ஜூன் 14, 2024 06:05 AM
ADDED : ஜூன் 14, 2024 02:31 AM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, தன் மூத்த அமைச்சர்களை தக்க வைத்ததுபோல், முக்கிய அதிகாரிகளையும் அதே பதவியில் தக்க வைத்துள்ளார். அதன்படி, அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், பி.கே.மிஸ்ரா, முதன்மைச் செயலராகவும் தொடர்கின்றனர்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மற்றும் முக்கிய அமைச்சர்களை அதே பதவியில் தக்க வைத்துள்ளார். இந்த வரிசையில், தன் நம்பிக்கைக்குரிய முக்கிய அதிகாரிகளையும் அவர் தக்க வைத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான அஜித் தோவல் மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பி.கே. மிஸ்ரா, பிரதமரின் முதன்மை செயலராக தொடர்கிறார்.
இதுபோல முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான அமித் காரே, தருண் கபூர் ஆகியோர், பிரதமரின் ஆலோசகர்களாக தொடர்கின்றனர். பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமனங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் பதவிக் காலம் முடியும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை அந்தப் பதவியில் தொடர்வார். அவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பார். முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ராவின் பதவிக் காலமும், பிரதமரின் பதவிக் காலம் முடியும் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இருக்கும்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான அமித் காரே, தருண் கபூர் ஆகியோர், பிரதமரின் ஆலோசகர்களாக தொடருவர். அவர்களுடைய பதவிக் காலம் இரண்டாண்டுகளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.