முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தீர்ப்புக்கு தனிநபர் வாரியம் எதிர்ப்பு
முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தீர்ப்புக்கு தனிநபர் வாரியம் எதிர்ப்பு
முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தீர்ப்புக்கு தனிநபர் வாரியம் எதிர்ப்பு
ADDED : ஜூலை 15, 2024 12:38 AM

புதுடில்லி: முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுக்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க அதன் தலைவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜீவனாம்சம் தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற அமர்வு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதில், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 125வது பிரிவின்படி, முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோர முடியும்.
திருமண உறவு
இந்த சட்டப் பிரிவு, மதச்சார்பற்றது என்பதால், முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்தும் என, உத்தரவில் அமர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், ஏ.ஐ.எம்.பி.எல்.பி., எனப்படும் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் டில்லியில் நடந்தது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் இலியாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
முகமது நபி தெரிவித்துள்ள அனுமதிக்கப்பட்ட தனிநபர் நடவடிக்கைகளில், விவாகரத்து என்பதும் மிகவும் வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அதனால், திருமண உறவைத் தொடர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். குரானில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, திருமண உறவை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கையை தொடரவே முடியாது என்ற பட்சத்தில், கடைசி வாய்ப்புதான் விவாகரத்து.
இதன்படி பார்த்தால், விவாகரத்து என்பது, முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு எதிரானதாகும். அதனால், முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் என்பது எங்கள் மதக் கொள்கைக்கு எதிரானது.
இந்த விவகாரத்தில், சட்ட ரீதியில், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக ரீதியில், உச்ச நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வாரியத்தின் தலைவர் கலீத் சைபுல்லா ரஹ்மானிக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின், 25வது பிரிவு வழங்கியுள்ள மத உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது. பல மதங்கள், பல கலாசாரங்கள் உள்ள நம் நாட்டில், பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை.
இதை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வக்பு சொத்துகள், முஸ்லிம்களின் நலனுக்கானது. அது முஸ்லிம்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதை சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள், வெறுப்பு பேச்சு, வெறுப்பு நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளது.
அடித்துக் கொல்வது போன்ற செயல்கள் நிறுத்தப்படும் என்று நம்புகிறோம். சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என, மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரச்னை
வழிபாட்டு தலங்கள் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே உறுதியளித்தபோதும், தற்போது, ஞானவாபி வளாகம், மதுரா ஷாஹி ஈத்கா பிரச்னைகள் தொடர்பாக வழக்குகள் நடக்கின்றன. இதை நிறுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில், டில்லியில், மசூதிகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். மேற்காசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.