Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகர ராவ் கலக்கம்

கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகர ராவ் கலக்கம்

கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகர ராவ் கலக்கம்

கட்சி தாவும் எம்.எல்.ஏ.,க்கள் சந்திரசேகர ராவ் கலக்கம்

ADDED : ஜூன் 24, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
ஹைதராபாத்: தெலுங்கானாவில், பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,வான சஞ்சய் குமார் காங்கிரசில் இணைந்துள்ளது, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆட்சியை பறிகொடுத்த பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி 39 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசுக்கு தாவுவது தொடர்கதையாக உள்ளது. காடியம் ஸ்ரீஹரி, தெல்லம் வெங்கட ராவ், தனம் நாகேந்தரைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி பி.ஆர்.எஸ்., மூத்த தலைவரும், முன்னாள் சட்டசபை சபாநாயகருமான பொச்சாராம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி காங்கிரசில் இணைந்தார்.

இதையடுத்து, ஜக்தியால் தொகுதி எம்.எல்.ஏ.,வான சஞ்சய் குமார் நேற்று முன்தினம் காங்கிரசில் இணைந்தார். அவரை முதல்வர் ரேவந்த் ரெட்டி வாழ்த்தி வரவேற்ற செய்தியை மாநில காங்கிரஸ் கட்சி, சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஐந்து எம்.எல்.ஏ.,க்களைத் தவிர மேலும் பல பி.ஆர்.எஸ்., தலைவர்கள், ஹைதராபாத் மேயர் விஜய லட்சுமி கட்வால் உள்ளிட்டோர் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

எம்.எல்.ஏ.,க்களின் கட்சித் தாவல் நடவடிக்கையால் சட்டசபையில் பி.ஆர்.எஸ்., கொஞ்சம் கொஞ்சமாக பலத்தை இழந்து வரும் சூழலில், மேலும் சிலரை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பி.ஆர்.எஸ்., தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கலக்கம் அடைந்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us