Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ போராட்டத்தில் கட்சிகள் 'பிசி' ; மழை பாதிப்பால் மக்கள் அவதி

போராட்டத்தில் கட்சிகள் 'பிசி' ; மழை பாதிப்பால் மக்கள் அவதி

போராட்டத்தில் கட்சிகள் 'பிசி' ; மழை பாதிப்பால் மக்கள் அவதி

போராட்டத்தில் கட்சிகள் 'பிசி' ; மழை பாதிப்பால் மக்கள் அவதி

ADDED : ஆக 05, 2024 11:08 PM


Google News
பெங்களூரு : மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக போராட்டங்கள் நடத்தி வருவதிலேயே காலம் கழிப்பதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கர்நாடகாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. 223 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவியது. குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டனர். வறட்சியால் விவசாய பயிர்கள் நாசமாயின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுங்கட்சியினர் தரப்பில் சரியாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகளுக்கு நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.

ஆனால், இந்தாண்டு வறட்சி நீங்கி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மலை பிரதேசங்கள், வட மாவட்டங்கள் என பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மழையால் உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, குடகு, சிக்கமகளூரு, பெலகாவி, சாம்ராஜ்நகர், ஹாசன், கதக், ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகரா என பல மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. காவிரி, கிருஷ்ணா, நேத்ராவதி, ஷராவதி, கபிலா ஆறுகளில் வெள்ள பெருக்கு காணப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியினரும் கண்டுகொள்ளவில்லை. பெயரளவுக்கு முதல்வர் சித்தராமையா மற்றும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு அமைச்சர்கள் மட்டுமே மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு செல்லவில்லை. மாறாக, பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். எதிர்க்கட்சிகளும், தங்கள் பொறுப்பை உணராமல், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை செல்கின்றனர்.

தங்களை தேர்ந்தெடுத்த மக்களை கண்டுகொள்ளாமல், அரசியல் செய்வதிலேயே அனைத்து கட்சியினரும் செயல்படுகின்றனர் என்பதே, பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us