தர்ஷனுடன் பார்ட்டியில் பங்கேற்பு சிரிப்பு நடிகர் சிக்கண்ணாவுக்கு 'சிக்கல்'
தர்ஷனுடன் பார்ட்டியில் பங்கேற்பு சிரிப்பு நடிகர் சிக்கண்ணாவுக்கு 'சிக்கல்'
தர்ஷனுடன் பார்ட்டியில் பங்கேற்பு சிரிப்பு நடிகர் சிக்கண்ணாவுக்கு 'சிக்கல்'
ADDED : ஜூன் 18, 2024 06:42 AM

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்படுவதற்கு முன், நடந்த பார்ட்டியில் பங்கேற்றதால், நகைச்சுவை நடிகர் சிக்கண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பெங்களூரின் காமாட்சி பாளையா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, கால்வாய் ஒன்றில் சமீபத்தில் ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட உடல், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பது தெரிந்தது. இவர், நடிகர் தர்ஷனின் ரசிகர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போது, தன் தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், தர்ஷன் உட்பட அவரது கூட்டாளிகளே கொலை செய்தது உறுதியானது. இவரது கொலையில் தர்ஷன் உட்பட 18 பேரை போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கால், நகைச்சுவை நடிகர் சிக்கண்ணாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரேணுகாசாமி கொலை நடந்த நாளன்று மதியம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள, 'ஸ்டோனி ப்ரூக் பப்'பில் தர்ஷனும், அவரது நண்பர்களும் பார்ட்டி நடத்தினர். இதில் நகைச்சுவை நடிகர் சிக்கண்ணாவும் கலந்து கொண்டார். அன்று மாலையில், சிறிது வேலை இருப்பதாக கூறிவிட்டு, தர்ஷன் வெளியே புறப்பட்டு சென்றிருந்தார்.
கொலை சம்பவம் நடந்த நாளன்று, பார்ட்டியில் இருந்த சிக்கண்ணாவுக்கு, போலீசார் 'சம்மன்' அனுப்பி விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கிடையில், அன்றைய தினம் பார்ட்டியில் பங்கேற்ற தர்ஷன் உட்பட அவரது கூட்டாளிகளை, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார், நேற்று, அந்த பப்புக்கு அழைத்து சென்றனர். இதே வேளை, சிக்கண்ணாவும் இங்கே வந்தார். அவரையும் சேர்ந்து, அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட இடம், எத்தனை மணிக்கு வந்தனர், யார் யாரெல்லாம் பார்ட்டியில் பங்கேற்றனர், எத்தனை ரூபாய் செலவு செய்தனர் உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர்.
இந்த இடத்தில் அமர்ந்து, மது அருந்தி கொண்டே, ரேணுகாசாமியை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு மணி நேர விசாரணைக்கு பின், அனைவரையும் மீண்டும் அன்னபூர்னேஸ்வரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
சிக்கண்ணாவும் வரவழைத்து, விசாரிக்கப்பட்டார். 'கொலை நடந்த தினத்தன்று, பார்ட்டியில் இருந்து, தர்ஷன் ஏன் எழுந்து சென்றார் என்று தெரியவில்லை. 'டிவி'யில் பார்த்த பின் தான், ரேணுகாசாமியை கொலை செய்ததாக தெரிந்து கொண்டேன். கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எதுவுமே தெரியாது' என்று சிக்கண்ணா கூறி உள்ளார்.