உரிகம் தபால் நிலையம் எளிய முறையில் திறப்பு
உரிகம் தபால் நிலையம் எளிய முறையில் திறப்பு
உரிகம் தபால் நிலையம் எளிய முறையில் திறப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:16 PM

தங்கவயல்: புதுப்பிக்கப்பட்ட உரிகம் தபால் நிலையம் திறப்பு விழா, நேற்று எளிமையாக நடந்தது.
கோலார் மாவட்டத்தின் முதல் தபால் நிலையம், 138 ஆண்டுகளுக்கு முன்பு தங்கவயல் உரிகத்தில் அமைக்கப்பட்டது. இந்த தபால் நிலைய கட்டடம், 2012ல் பழுதடைந்தது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்புக்கு இல்லாமல் போனது. இதனால், தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால், பென்ஷன் வாங்கும் முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் அல்லல் பட்டனர். பதிவு தபால், ஸ்பீட் போஸ்ட், சேமிப்பு உட்பட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கும் பொதுமக்கள் ராபர்ட்சன்பேட்டைக்கு செல்ல நேரிட்டது. உரிகம் தபால் நிலையம் எப்போது திறக்கப்படும் என பலரும் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஒரு மாதமாக தபால் அலுவலக பணிகள் விரைவாக நடந்தன. இதன் திறப்பு விழா நேற்று எளிய முறையில் நடந்தது. மாநில தபால் துறை உதவி இயக்குனர் சந்தேஷ் திறந்து வைத்தார்.
கோலார் மாவட்ட தலைமை அதிகாரி சசிகுமார், தங்கச்சுரங்க நிறுவன தலைமை சிறப்பு அதிகாரி சசிரஞ்சன், பாதுகாப்பு தலைமை அதிகாரி அமித்குமார் பாண்டே, முதல் நிலைக் கல்லுாரி முதல்வர் டாக்டர் கிருஷ்ணகுமார், தங்கச் சுரங்க முன்னாள் அதிகாரிகள் கிருஷ்ணன், சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். தபால் துறையினரும் கலந்து கொண்டனர்.
இது மத்திய அரசின் தபால்துறை விழா. ஆயினும், எம்.பி., - எம்.எல்.ஏ., உட்பட மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.
உரிகம் தபால் நிலையத்துக்கு உட்பட்ட 30 பகுதிகளை சேர்ந்தோர், 12 ஆண்டுகளாக ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையத்துக்கு சென்று வந்தனர்.
உரிகம் தபால் நிலையம் இயங்குவது குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. ஜூலை 1 முதல், முறையாக பரிவர்த்தனை துவங்குகிறது.