மேலவை தேர்தலிலும் 'ஆன்லைன் பட்டுவாடா'
மேலவை தேர்தலிலும் 'ஆன்லைன் பட்டுவாடா'
மேலவை தேர்தலிலும் 'ஆன்லைன் பட்டுவாடா'
ADDED : ஜூன் 04, 2024 10:59 PM
பெங்களூரு: சட்டசபை, லோக்சபா தேர்தலை போன்று, மேலவை தேர்தலிலும் பணம் விளையாடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 'அறிவாளிகளின் இல்லம்' என, அழைக்கப்படும் மேலவையிலும், ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருள் கொடுப்பது, ஆசை வார்த்தைகள் காண்பிப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளன.
மேலவை ஆசிரியர் தொகுதி தேர்தலில், ஆசிரியர்களே வாக்காளர்களாவர். இவர்களை அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. ஓட்டுப்பதிவுக்கு முன்பே இவர்களுக்கு பணமும், பரிசு பொருட்களும் கிடைத்துள்ளன.
முகவரி மாறியவர்கள், பரிசு பொருட்கள் கிடைக்காதவர்களுக்கு, ஆன்லைன், போன்பே மூலமாக பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பெண் வாக்காளர்களுக்கு சேலை, ரவிக்கை, மஞ்சள், குங்குமச்சிமிழ், அரிசி - வெல்லம் உட்பட, பல பொருட்கள் அடங்கிய பரிசு மூட்டை வழங்கப்பட்டது. வாக்காளர்களுக்கு சில வேட்பாளர்கள் 'சொனாட்டா' நிறுவனத்தின் கைக்கடிகாரம் வழங்கினார்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சை வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை தாராளமாக வழங்குகின்றனர்.
வட கிழக்கு ஆசிரியர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஒரு ஓட்டுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியுள்ளார்.
இது பெரும் சர்ச்சைக்கு காரணமானது. பணம் கிடைக்காதோருக்கு, டோக்கன் வழங்கப்பட்டது.
ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், 20 முதல் 40 கோடி ரூபாய் வரை செலவிட்டனர்.
பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குவோரிடம், ஆசிரியர் தொகுதியில் நேர்மையான பணிகளை எதிர்பார்க்க முடியுமா;
கை நிறைய ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பணம், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியது சரியா, தொகுதிக்கு நல்லது செய்யும் அறிவாளிகளை தேர்வு செய்ய வேண்டாமா, அறிவாளிகளை உருவாக்கும் ஆசிரியர்களே, அறிவை பயன்படுத்தாவிட்டால் எப்படி என, அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.