இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகனை சுட்டுக்கொன்ற முதியவர்
இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகனை சுட்டுக்கொன்ற முதியவர்
இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகனை சுட்டுக்கொன்ற முதியவர்
ADDED : மார் 12, 2025 12:03 AM

ராஜ்கோட்: குஜராத்தில், இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 52 வயது மகனை, 76 வயது தந்தை சுட்டுக் கொன்றார். மருமகளையும் சுட முயன்ற அவரை, போலீசார் கைது செய்தனர்.
குஜராத் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராம்பாய் பொரிச்சா, 76. இவரது மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
எதிர்ப்பு
அதிலிருந்து, இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்தார் ராம்பாய். மகன் பிரதாப், மருமகள் ஜெயா, பேரன் ஜெய்தீப் ஆகியோர், பெரியவரின் எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குடும்ப அந்தஸ்து, மானம், மரியாதை என கூறி, தந்தையின் எண்ணத்திற்கு மகன் பிரதாபும் முட்டுக்கட்டை போட்டு வந்தார்.
இதனால் அடிக்கடி கோபப்படும் ராம்பாய், 'எனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், அனைவரையும் சுட்டுக் கொன்று விடுவேன்' என கூறி வந்தார்.
அதை வெறும் மிரட்டல் என கருதிய குடும்பத்தினர், அவரின் வார்த்தைகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தனியாக வசித்த அந்த பெரியவர், சமீபத்தில், மகன் பிரதாபை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் மற்றும் கணவரின் அலறல் சத்தம் கேட்டு, பெரியவர் தங்கியிருந்த அறை கதவை பலமாக தட்டிய மருமகளையும் சுட முயன்று அவர் விரட்டிச் சென்றார். அந்த பெண் அச்சமடைந்து, பக்கத்து அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார்.
தொந்தரவு
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார், மகனின் சடலம் அருகே துப்பாக்கியுடன் கோபாவேசமாக நின்றிருந்த 76 வயது தந்தையை கைது செய்தனர்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், 'இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மகன் பிரதாபை சுட்டுக் கொன்றுவிட்டேன். அவன் பல விதங்களில் என்னை தொந்தரவு செய்து வந்தான்' என கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.