'நீட்' முடிவுகளில் முறைகேடு இல்லை சென்னை ஐ.ஐ.டி., பகுப்பாய்வில் தகவல்
'நீட்' முடிவுகளில் முறைகேடு இல்லை சென்னை ஐ.ஐ.டி., பகுப்பாய்வில் தகவல்
'நீட்' முடிவுகளில் முறைகேடு இல்லை சென்னை ஐ.ஐ.டி., பகுப்பாய்வில் தகவல்
ADDED : ஜூலை 12, 2024 01:50 AM
புதுடில்லி, இளநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் தரவுகளை பகுப்பாய்வு செய்த சென்னை ஐ.ஐ.டி., அதில் எந்த முறைகேடுகளும் இடம் பெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக, மத்திய அரசு மற்றும் என்.டி.ஏ., உச்ச நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் தாக்கல் செய்துள்ளன.
மே 5ல் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததால், மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
எனவே, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யவும், மறு தேர்வு நடத்தவும், வினாத்தாள் லீக் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை கடந்த 8ம் தேதி விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை உறுதி பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த உறுதி பத்திரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் விபரம்:
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளில் முறைகேடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் விரிவான மதிப்பெண் தரவு பகுப்பாய்வு நடத்தியது.
அதில், தேர்வு மதிப்பெண்ணில் எவ்வித அசாதாரண நிலையும் கண்டறியப்படவில்லை. மதிப்பெண் முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் அதிக மதிப்பெண் வழங்கப்படவும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உறுதி பத்திரங்கள் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு தாக்கல் செய்த உறுதி பத்திர நகல் தங்கள் தரப்புக்கு வழங்கப்படவில்லை என, மனுதாரர் தரப்பில் சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.