டில்லிக்கு தருவதற்கு கூடுதல் நீர் இல்லை கோர்ட்டில் ஹிமாச்சல் அரசு தகவல்
டில்லிக்கு தருவதற்கு கூடுதல் நீர் இல்லை கோர்ட்டில் ஹிமாச்சல் அரசு தகவல்
டில்லிக்கு தருவதற்கு கூடுதல் நீர் இல்லை கோர்ட்டில் ஹிமாச்சல் அரசு தகவல்
ADDED : ஜூன் 14, 2024 12:24 AM

புதுடில்லி, 'டில்லிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பதாக முன்பு கூறிய தகவல் தவறு. எங்களிடம் கூடுதல் தண்ணீர் இல்லை' என, ஹிமாச்சல பிரதேச அரசு நீதிமன்றத் தில் தெரிவித்துள்ளது.
டில்லியில் கடும் வெயிலுடன், தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், யமுனை நதியில் இருந்து தங்களுக்கு ஹிமாச்சல் கூடுதல் தண்ணீரை திறந்த விடக் கோரி, டில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, வினாடிக்கு 137 கனஅடி வீதம், தங்களிடம் உள்ள கூடுதல் நீரை ஹிமாச்சல் அரசு திறந்து விட வேண்டும்.
அது டில்லியை அடைவதை, இடையில் உள்ள ஹரியானா உறுதி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உபரி நீர்
நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய, காங்கிரசைச் சேர்ந்த ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, டில்லிக்கு கூடுதல் நீரை திறந்து விட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹிமாச்சல் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டில்லிக்கு ஏற்கனவே யமுனை நதியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் நீரைத் திறந்து விடுவதற்கு எங்களிடம் உபரி நீர் இல்லை.
'அதனால் ஏற்கனவே அளித்த தவறான தகவல்களுக்கு மன்னிக்க வேண்டும். புதிய பதில் மனு தாக்கல் செய்யப்படும்' என, குறிப்பிட்டார்.
இது குறித்து யமுனை நதி நீர் வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளதாவது:
ஹரியானா அரசுக்கு ஹிமாச்சல் அரசு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், யமுனையில் போதிய நீரை திறந்து விட்டுள்ளதாகவும், அது டில்லியைச் சென்றடைவதை உறுதி செய்யும்படி கூறப்பட்டுள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உபரி நீரை திறந்துவிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹிமாச்சல் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது. நீதிமன்றத்தில் பொய் தகவல் கூறியதற்காக, தலைமைச் செயலரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என, அமர்வு எச்சரித்தது.
வற்றிய யமுனை
வட மாநிலங்களில் பாயும் முக்கியமான நதிகளில் யமுனையும் ஒன்று. இமயமலையில் யமுனோத்ரியில் உருவாகி, உத்தரகண்ட், ஹிமாச்சல், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை இந்த நதி கடந்து செல்கிறது. நம் நாட்டில் உள்ள மிக நீள, அகலமான நதிகளில் இதுவும் ஒன்று.
தற்போது தொழிற்சாலை கழிவுகள், மனிதர்கள் வீசி எறியும் கழிவுகளால் யமுனை கடுமையாக மாசு அடைந்துள்ளது.
தண்ணீர் வற்றி, மிகவும் வறண்டு காணப்படுகிறது. மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் போன்றவை நதிக்குள் அமைக்கப்பட்டிருப்பதும், நதியில் தண்ணீர் வறண்டு போவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.