8,000 வாகனங்களை நிறுத்தும் வசதி 'பார்க்கிங்' உருவாக்கும் என்.சி.ஆர்.டி.சி.,
8,000 வாகனங்களை நிறுத்தும் வசதி 'பார்க்கிங்' உருவாக்கும் என்.சி.ஆர்.டி.சி.,
8,000 வாகனங்களை நிறுத்தும் வசதி 'பார்க்கிங்' உருவாக்கும் என்.சி.ஆர்.டி.சி.,
ADDED : ஜூலை 18, 2024 08:27 PM
சரோஜினி நகர்:'நமோ பாரத்' ரயில் நிலையங்களில் 8,000 வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 'பார்க்கிங்' பகுதிகளை உருவாக்க என்.சி.ஆர்.டி.சி., எனும் தேசிய தலைநகர்ப் பகுதி போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
டில்லி - காசியாபாத் - மீரட் இடையே ஆர்.ஆர்.டி.எஸ்., என்ற ரேப்பிட் ரயில் சேவைகளை என்.சி.ஆர்.டி.சி., வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் 25 ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஐந்து முதல் 10 கி.மீ.,க்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
டில்லி - மீரட் இடையே ஆர்.ஆர்.டி.எஸ்., சேவை முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரும்போது, பொதுப் போக்குவரத்தின் பங்கு 63 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 37 சதவீதமாக உள்ளது.
எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இந்த ரயில் நிலையங்களில் பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மீரட் தெற்கு ரயில் நிலையத்தில், 300 கார்கள், 900 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய மிகப்பெரிய பார்க்கிங் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
டில்லி, சராய் காலே கான் நிலையத்தில் 275 கார்கள், 900 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் இரண்டாவது பெரிய பார்க்கிங் இடம் உருவாக்கப்பட்டு வருகிறது.
'பார்க்கிங்' பகுதிகளை உருவாக்குவது தொடர்பாக என்.சி.ஆர்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆர்.ஆர்.டி.எஸ்., நிலையங்களில் 8,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் 'பார்க்கிங்' இடங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த வாகன நிறுத்துமிடங்களில் மின்சார சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அத்துடன் பயணியர் தாங்கள் செல்லும் இடத்தை அடைவதற்கான இணைப்பு போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்.ஆர்.டி.எஸ்., சேவை முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது, டில்லி - மீரட் வழித்தடத்தில் தனியார் வாகனங்களின் போக்குவரத்தையும் விபத்துகளையும் கணிசமாகக் குறைப்பது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் இது உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.