ADDED : ஜூலை 31, 2024 01:27 AM

வெற்று வீராப்பு பேசுகின்றனர்!
சீனா, நம் எல்லை அருகே பாங்காங் ஏரியில் பாலம் அமைத்துள்ளது. அந்த பகுதியில் சீன ஆதிக்கத்தை அனுமதிக்கிறதா மத்திய அரசு? மறுபக்கம் பாகிஸ்தான் அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் ஜம்மு - காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் பரவியுள்ளது. வெற்று வீராப்பு பேசும் அரசு, தேச நலன்களை பாதுகாக்க தவறிவிட்டது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
நடிகையருக்கு விதி இல்லையா?
பார்லிமென்டில் ராகுலை சந்தித்த விவசாயிகள், பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அது ஒழுங்குமுறை மீறல் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது பார்லிமென்டுக்கு பல நடிகையர் அழைக்கப்பட்டனர். அவர்கள் அரசை பாராட்டி பேட்டி தந்தனர். அப்போது ஒழுங்குமுறை மீறப்படவில்லையா?
வேணுகோபால்
பொதுச்செயலர், காங்கிரஸ்
தலைமையை ஏமாற்றும் யோகி!
உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தில் நான், என் சித்தப்பா சிவ்பால் யாதவை முட்டாளாக்கி விட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நான் யாரையும் முட்டாளாக்கியது இல்லை. ஆனால் உண்மையில் யோகி ஆதித்யநாத் தான் டில்லி தலைமையை முட்டாளாக்கி வருகிறார்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி