மைசூரு மிருகக்காட்சி சாலையில் டிக்கெட் முன்பதிவுக்கு 'வாட்ஸாப்' எண்
மைசூரு மிருகக்காட்சி சாலையில் டிக்கெட் முன்பதிவுக்கு 'வாட்ஸாப்' எண்
மைசூரு மிருகக்காட்சி சாலையில் டிக்கெட் முன்பதிவுக்கு 'வாட்ஸாப்' எண்
ADDED : ஜூன் 12, 2024 12:13 AM

மைசூரு: மைசூரு மிருகக் காட்சி சாலைக்கு செல்வோர் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய, 'வாட்ஸாப் எண்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அரண்மனை நகரமான மைசூருக்கு நாள் தோறும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகருக்கு வருவோர், கண்டிப்பாக சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவுக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணியரும் அதிகளவில் வருகை தருவர். அப்போது நுழைவு கட்டணம் வாங்கும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் சுற்றுலா பயணியர் எரிச்சல் அடைவர்.
'வாட்ஸாப்' அறிமுகம்
இதை கருத்தில் கொண்டு, கர்நாடகா உயிரியல் பூங்கா ஆணையம், புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் இனி, வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
இதற்காக, 96866 68818 என்ற வாட்ஸாப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், இந்த எண்ணுக்கு தகவல் அனுப்பி, தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். பின், நுழைவு வாயில் அருகில் உள்ள 'கியூஆர் கோடு' ஸ்கேன் செய்து, டிக்கெட் பெற்று கொள்ளலாம்.
இது தொடர்பாக உயிரியல் பூங்கா முதன்மை அதிகாரி மகேஷ் குமார் கூறியதாவது:
எண்ணிக்கை அதிகரிப்பு
நகருக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் மிருகக்காட்சி சாலைக்கு ஐந்து லட்சம் பார்வையாளர்களும், காரஞ்சி ஏரியை மூன்று லட்சம் பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.
பல சுற்றுலா தலங்களில், டிக்கெட் கவுன்டரில் வரிசையில் நிற்கவும் சங்கடப்படுகின்றனர்.
இதை தவிர்க்க, மிருகக்காட்சி சாலையில் 'வாட்ஸாப் எண்' திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த எண் மூலம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுலா பயணியர் தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இங்கு வந்து ஸ்கேன் செய்து, டிக்கெட் பெறலாம். இதற்கு சுற்றுலா பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் டிக்கெட் பெற வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'அனைத்து இடங்களும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுபோன்று டிக்கெட் முன்பதிவும் டிஜிட்டல் மயமானது எங்களுக்கு வசதியாக உள்ளது' என்றனர்.