'கனகபுரா பிரதர்ஸ்'க்கு புதிய எதிரியான முனிரத்னா!
'கனகபுரா பிரதர்ஸ்'க்கு புதிய எதிரியான முனிரத்னா!
'கனகபுரா பிரதர்ஸ்'க்கு புதிய எதிரியான முனிரத்னா!
ADDED : ஜூன் 19, 2024 05:58 AM

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை என்று கூறுவர். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ கர்நாடக அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும். இன்று கழுத்தை கட்டிக்கொண்டு நண்பர் போல் சுற்றுபவர்கள், நாளையே எதிரிகளாகி விடுவர். கர்நாடக அரசியல்வாதிகளின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியாது.
கர்நாடக அரசியல் களத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தற்போதைய துணை முதல்வர் சிவகுமார் குடும்பத்திற்கு இடையில் பல ஆண்டுகளாகவே மோதல் உள்ளது. 2018 சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ்- - ம.ஜ.த., கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்வரானார்; சிவகுமார் நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்தார்.
திருமண பந்தம்
குமாரசாமியின் கீழ் பணியாற்றியதால் சிவகுமாருக்கும், குமாரசாமிக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது கைகோர்த்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இருவருமே ஒக்கலிகர் சமுதாயம் என்பதால், சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவை, குமாரசாமியின் மகன் நிகிலுக்கு திருமணம் செய்து வைக்கவும் பேச்சு அடிபட்டது. ஆனால், அது கைகூடவில்லை.
இந்நிலையில், 14 மாதங்களில் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன்பின் குமாரசாமியும், சிவகுமாரும் மீண்டும் எலியும், பூனையுமாக மாறினர். தற்போது வரை அவர்களுக்கு இடையிலான அரசியல் மோதல் நீடிக்கிறது.
இந்நிலையில் சிவகுமார், அவரது தம்பி சுரேஷுக்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ளார் பெங்களூரு ஆர்.ஆர்., நகர் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னா. இவர் முன்பு காங்கிரஸில் இருந்தவர். அந்த கால கட்டத்தில் சிவகுமார், சுரேஷ் ஆதரவாளராக இருந்தார். இதனால், 2013 சட்டசபை தேர்தலில் ஆர். ஆர். நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்து, வெற்றியும் பெற்றார். 2018 சட்டசபை தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றார்.
கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்தார். 2019ல் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியில் தோட்டக்கலை துறை அமைச்சரானார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், முனிரத்னாவை தோற்கடிக்க சிவகுமாரும், சுரேஷும் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், அவர் வெற்றி பெற்று விட்டார். தன்னை தோற்கடிக்க முயற்சி செய்ததால், அவர்களுக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்தார்.
இந்நிலையில் முனிரத்னாவுக்கு எதிராக, ஆர்.ஆர்., நகர் தொகுதி பா.ஜ.,வில் ஒரு கோஷ்டி செயல்பட துவங்கியது. இதனால் மீண்டும் காங்கிரசுக்கு தாவ முனிரத்னா முயற்சி செய்தார். இதற்கு, முதல்வர் சித்தராமையாவின் ஒப்புதல் கிடைத்தது.
ஆனால், அவரை மீண்டும் காங்கிரசில் சேர்க்க, சிவகுமார், சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அப்படி சேர்த்தாலும் இடைத்தேர்தலில் முனிரத்னா போட்டியிடக் கூடாது.
வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்' என்று நிபந்தனை வைத்தனர். இதனால் காங்கிரசில் மீண்டும் சேரும் முடிவை முனிரத்னா கைவிட்டார்.
காலில் விழுந்தார்
சிவகுமார், சுரேஷுக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்ய ஆரம்பித்தார். பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் சிவகுமார், தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று, முனிரத்னா குற்றம் சாட்டினார்.
தொகுதிக்கு நிதி ஒதுக்க கோரி சிவகுமார் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், முனிரத்னா அரசியல் நாடகம் போடுவதாக சிவகுமார் விமர்சித்தார். சிவகுமார் தம்பி சுரேஷ் எம்.பி., ஆக இருந்த பெங்களூரு ரூரல் தொகுதிக்கு உட்பட்டு, ஆர்.ஆர்.,நகர் எனும் ராஜ ராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி வருகிறது.
'கனகபுரா பிரதர்ஸ்' தங்கள் சேட்டையை தனது தொகுதியிலும் ஆரம்பித்து விட்டனர் என்று, முனிரத்னா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சுரேஷை தோற்கடித்து காட்டுவோம் என்று சபதம் எடுத்தார்.
சுரேஷை தோற்கடிக்க தீவிரமாக வேலை செய்தார். இதன் பலனாக, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், சுரேஷை வீழ்த்தி, பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் அபார வெற்றி பெற்றார்.
ஆர்.ஆர்., நகர் தொகுதியில் மட்டும் சுரேஷை விட மஞ்சுநாத் 99,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். இதற்கு முனிரத்னாவின் உழைப்பு காரணம். தங்களிடமிருந்து அரசியல் கற்றுக்கொண்டு, தங்களுக்கு எதிராகவே செயல்படும் முனிரத்னா மீது சிவகுமார், சுரேஷ் கடும் கோபத்தில் உள்ளனர். வளர்த்த கடா மாரில் பாய்கிறது. அந்தக் கிடாவை அடித்து ஒடுக்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளனர்.
அடுத்த சட்டசபை தேர்தலில், முனிரத்னாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி, இப்போது இருந்து அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
- நமது நிருபர் -