ஹிஜாபுக்கு தடை விதித்த கல்லுாரி : தலையிட மும்பை ஐகோர்ட் மறுப்பு
ஹிஜாபுக்கு தடை விதித்த கல்லுாரி : தலையிட மும்பை ஐகோர்ட் மறுப்பு
ஹிஜாபுக்கு தடை விதித்த கல்லுாரி : தலையிட மும்பை ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜூன் 26, 2024 09:27 PM

மும்பை: ஹிஜாப், புர்கா உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்ட கல்லுாரி நிர்வாகத்தின் முடிவில் தலையிட, மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், செம்பூர் டிராம்பே கல்விச் சங்கத்தின், என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லுாரி இயங்கி வருகிறது.ஹிஜாப், புர்கா, நகாப், தொப்பி உள்ளிட்டவற்றை மாணவர்கள் அணியக் கூடாது என்றும், ஆடைக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்லுாரி நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, அந்த கல்லுாரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒன்பது மாணவியர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'கல்லுாரி நிர்வாகத்தின் உத்தரவு, மாணவியரின் மதத்தை கடைப்பிடிப்பதற்கான அடிப்படை உரிமை, தனியுரிமைக்கு எதிரானது. 'ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம். கல்லுாரி நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.
கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கல்லுாரியில் ஹிஜாப், புர்கா போன்றவற்றை தடை செய்வதற்கான முடிவு, ஆடைக் குறியீட்டிற்கான ஒரு ஒழுங்கு நடவடிக்கை.இது, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது அல்ல. அனைத்து மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த மாணவர் களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, 'கல்லுாரி நிர்வாகம் எடுத்த முடிவில் தலையிட முடியாது' என, தெரிவித்தது.