பஸ் கட்டணம் திடீர் உயர்வு அரசு மீது ஆண்கள் அதிருப்தி
பஸ் கட்டணம் திடீர் உயர்வு அரசு மீது ஆண்கள் அதிருப்தி
பஸ் கட்டணம் திடீர் உயர்வு அரசு மீது ஆண்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2024 11:46 PM
பெங்களூரு : எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக, அரசு மீது ஆண் பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்., ஆட்சிக்கு வந்த பின், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், 'சக்தி திட்டம்' துவங்கப்பட்டது.
ஆதார் அட்டைகளை காண்பித்து, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், ஆண் பயணியர் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணம் செய்கின்றனர்.
சக்தி திட்டத்தை பயன்படுத்தி பெண்கள் கோவில்களுக்கு சென்று வருகின்றனர். பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால், கர்நாடக அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை அரசு மறுக்கிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால் அரசு பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் கட்டண உயர்வு பற்றி அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஆனாலும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோ என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
மைசூரில் இருந்து புத்துாருக்கு கடந்த 3ம் தேதி சென்ற, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் 366 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் 10ம் தேதி 495 ரூபாயும்; 13ம் தேதி 540 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில் 174 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, ஆண் பயணியரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
'பெண்களுக்கு இலவச பயணம் கொடுத்து விட்டு, அதை ஈடுகட்ட எங்களிடம் கொள்ளை அடிக்கின்றனர்' என, அரசு மீது ஆண் பயணியர் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.