கபினி அணையில் அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றம்; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கபினி அணையில் அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றம்; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கபினி அணையில் அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றம்; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஜூலை 19, 2024 05:41 AM
கார்வார் : கபினி அணையில் இருந்து அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில் கடந்த சில தினங்களாக, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஷிரூர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் சிக்கி கொண்டன. நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது.
உத்தர கன்னடா கலெக்டர் லட்சுமி பிரியா என்று கூறுகையில், ''நிலச்சரிவில் 10 பேர் சிக்கினர். இதில் ஏழு பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் மூன்று பேரின் உடல்களையும் தேடும்படி நடந்து வருகிறது,'' என்றார்.
*1,005 மக்கள்
இந்நிலையில் நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தின் ஹொன்னவர், பட்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையால் அகநாசினி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் 1,005 மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லாபூர் அருகே தேவி மனை வனப்பகுதி சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலவள்ளி - மாரஹள்ளி கிராமங்களை இணைக்கும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
* 22 மதகுகள்
குமட்டாவில் இருந்து கோகர்ணா செல்லும் சாலையில் சில இடங்களில் மண் சரிந்து, தேசிய நெடுஞ்சாலை 66 ல் விழுந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஷிவமொகா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஷிவமொகா அருகே காஜனுார் கிராமத்தில் உள்ள துங்கா அணை நிரம்பி உள்ளது.
அணையின் 22 மதகுகள் வழியாக 73,391 கன அடி தண்ணீர் நேற்று துங்கா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் துங்கா ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பாபுஜி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
*இணைப்பு துண்டிப்பு
விஜயபுராவின் அலமாட்டி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
பாகல்கோட் கூடல சங்கமாவில் உள்ள பசவண்ணர் மணி மண்டபத்தின் சுவரை தொட்டபடி வெள்ளம் செல்கிறது.
பசவண்ணர் மணிமண்டபத்திற்கு வரும் சுற்றுலா பயணியர், கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்த்து, மொபைல் போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
மைசூரில் பெய்து வரும் கனமழையால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளதால் பல கிராமங்களின் இணைப்பு துண்டிதுள்ளது.
உடுப்பி, ஷிவமொகா, சிக்கமகளூரு, உத்தரகன்னடா, குடகு, பெலகாவி மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
*விடுமுறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலகாவி, கானாபுரா மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் மழை பெய்கிறது. எனவே இன்றும், நாளையும் கானாபுராவின் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் முகமது ரோஷண் உத்தரவிட்டுள்ளார்.
ஷிவமொகாவின் சாகரா, சொரபா, ஹொசநகர், தீர்த்தஹள்ளியிலும் தொடர் மழை பெய்கிறது. சிக்கமகளூரு, மூடிகெரே, களசா, சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, உடுப்பியின் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி, தண்ணீர் பாய்கிறது. சிருங்கேரி சாரதா மடத்தின், சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. களசாவின், ஹெப்பாலே பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் களசா - ஹொரநாடு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சிக்கமகளூரு மாவட்டம் முழுதும், 180 க்கும் மேற்பட்டவீடுகள் இடிந்துள்ளன. வீட்டை பறிகொடுத்து மக்கள் பரிதவிக்கின்றனர்.
கொப்பாவின், குட்டதோட்டா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சாந்தி கிராமத்தில், கிராம பஞ்சாயத்து கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. பிளேகள்ளு கிராமத்தில், மஞ்சு ஷெட்டியின் வீடு, முழுதாக இடிந்தது. அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினர். சிக்கமகளூரில் மழை குறைவதற்கான அறிகுறி தென்படவில்லை.
இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
.....
பாக்ஸ்கள்
கபினியில் இருந்து 70,000 கன அடி நீர் திறப்பு
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மைசூரில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி., ஆகும். நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 52,777 கன அடி நீர், வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 70,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், 17.70 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இது போன்று, மாண்டியாவில் கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., ஆகும். நேற்றிரவு 8:00 மணி நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு, 40,490 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 2,560 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், அணையில் 36.943 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இரண்டு அணைகளில் இருந்தும், வினாடிக்கு 72,560 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், கபினி அணை நீர் முழுதும் தமிழகத்துக்கு செல்கிறது. கே.ஆர்.எஸ்., அணை நீரில், சற்று கர்நாடக கால்வாய்களுக்கும், மீதி தமிழகத்துக்கும் செல்கிறது.
கபினி அணையில் இருந்து அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
...........................
நாமக்கல் லாரி ஓட்டுநர் உடல் கண்டெடுப்பு
ஒருவரை தொடர்ந்து தேடும் மீட்பு குழுவினர்
உத்தர கன்னடாவின், அங்கோலா அருகில் சிரூர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் சின்னப்பன், 50, உடல் நேற்று முன்தினம் கிடைத்தது. நேற்று மற்றொரு லாரி ஓட்டுநர் முருகன், 45, உடல் நேற்று சிக்கியது.
மற்றொரு லாரி ஓட்டுநர் சரவணன், 34, நிலைமை தெரியவில்லை. அவரை தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.