மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் எழுச்சி
மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் எழுச்சி
மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் எழுச்சி
ADDED : ஜூன் 05, 2024 01:24 AM

கோல்கட்டா:கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி, தன் அதிரடி அரசியல் வாயிலாக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளார்.
அதிக எம்.பி.,க்களை லோக்சபாவுக்கு அனுப்பும் மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தீவிர பா.ஜ., எதிர்ப்பாளர்.
இந்தத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதன் வாயிலாகவே, 'இண்டியா' கூட்டணி ஒரு வடிவத்துக்கு வந்தது.
தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு எதிராக மேற்கு வங்கத்தில் தீவிர அரசியல் செய்து வந்தார்.
இந்த தேர்தலில் அந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க மறுத்து, 42 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் அறிவிப்பை மம்தா அறிவித்தார்.
மார்க்சிஸ்ட்குக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வந்த நிலையில், இந்த தேர்தலில், அதனுடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் மிகவும் வைராக்கியமாக அவர் இருந்தார்.
ஒருவேளை இண்டியா கூட்டணி வென்றால், மத்தியில் தன் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று, அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் விரும்பின. அதில் முதன்மையில் இருந்தவார் மம்தா.
இரண்டு தொகுதிகள் தருவதாக காங்கிரசுக்கு கறார் காட்டினார். கடைசியில் அதுவும் தர முடியாது என்று, 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின்போது, ஓட்டுப்பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளில், திரிணமுல் காங்கிரஸ், 19 - 22 இடங்களையும், பா.ஜ., 19 - 23 இடங்களையும் வெல்லும் என்று கூறப்பட்டன.
கடைசியில் திரிணமுல் காங்., 22, பா.ஜ., 18 மற்றும் காங்., இரண்டு இடங்களில் வென்றன. தற்போதைய தேர்தலிலும், ஓட்டுப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகள், பா.ஜ.,வுக்கே சாதகமாக இருந்தன.
பா.ஜ., 21 - 26 தொகுதிகளில் வெல்லும் என்றும், திரிணமுல், 16 - 18 வரை மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டன.
ஆனால், தன் வலுவான தொண்டர் படை மற்றும் மக்களின் ஆதரவு ஆகியவை இன்னும் மங்க வில்லை.
மேற்கு வங்கம் தன் கோட்டை என்பதை, மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார். சரியான வேட்பாளர் தேர்வு, தீவிர பிரசாரம் என, எதிரணிகளை கலங்கடித்தார். மேலும் அதிரடியான, அனல் பறக்கும் தன் பிரசாரத்தால், மற்ற கட்சிகளை திணறடித்தார்.
இதன் வாயிலாக, 29 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரசின், ஒரு தொகுதியைச் சேர்த்தால், இண்டியா கூட்டணிக்கு, 30 இடங்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. பா.ஜ., 12, இடங்களில் வென்றுள்ளது.