எடியூரப்பா மீது குறி வைப்பு மகேஷ் தெங்கினகாய் புகார்
எடியூரப்பா மீது குறி வைப்பு மகேஷ் தெங்கினகாய் புகார்
எடியூரப்பா மீது குறி வைப்பு மகேஷ் தெங்கினகாய் புகார்
ADDED : ஜூன் 16, 2024 11:00 PM

தார்வாட்: ''வீரசைவ லிங்காயத் தலைவர்களை ஒழித்துக்கட்ட முதல்வர் சித்தராமையா அரசு திட்டமிட்டு உள்ளது,'' என ஹூப்பள்ளி பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாய் குற்றம்சாட்டி உள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலிலேயே 'போக்சோ' வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய காங்கிரஸ் முயற்சித்தது. இவ்வழக்கில் இருந்து எடியூரப்பா விடுபடுவார். எந்த காரணமும் இல்லாமல், அவரை கொடுமைப்படுத்த காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது.
ஜூன் 17 ல் விசாரணைக்கு ஆஜராவேன் என்று கூறிய போதும், அவருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. தற்போது இவ்வழக்கில், மாநில உயர் நீதிமன்றம், 'எடியூரப்பாவை இரண்டு வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளது. தங்கள் அரசின் தோல்வியை மறைக்க, காங்கிரஸ் இப்படியெல்லாம் செய்கிறது.
வால்மீகி ஆணையத்தில் நடந்த ஊழலை ஊடகங்களில் வெளிவராமல் இருக்கவே, எடியூரப்பாவை கைது செய்ய அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம், வீரசைவ லிங்காயத் தலைவர்களை ஒழித்து கட்ட, முதல்வர் சித்தராமையா அரசு திட்டமிட்டு உள்ளது.
முதல்வராகவும், நிதியமைச்சராகவும் பல வரவு, செலவு திட்டங்கள், சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். அவரது ஊழலை கண்டித்து பா.ஜ., போராட்டம் நடத்தும். முதல்வர் பதவி விலக வேண்டும்.
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு வந்த பின், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தார்வாடில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தவறு செய்தவர்களை கைது செய்யாமல், பிற சமூகத்தை சேர்ந்தவர்கள், பஜ்ரங்தள் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதை கண்டித்து போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தப்படும். மாநில அரசு, குறிப்பிட்ட சமூகத்தினரை மகிழ்விக்க, திருப்தி அரசியல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.