Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மெட்ரோ அதிகாரிகளுக்கு சொகுசு கார்; ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி

மெட்ரோ அதிகாரிகளுக்கு சொகுசு கார்; ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி

மெட்ரோ அதிகாரிகளுக்கு சொகுசு கார்; ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி

மெட்ரோ அதிகாரிகளுக்கு சொகுசு கார்; ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி

ADDED : மார் 14, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு : மெட்ரோ ரயில் பயண கட்டணம் உயர்த்தியதால், பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், மெட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் செலவில், சொகுசு கார் வாங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெங்களூரில் பயணியர், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மெட்ரோ ரயில் பயண கட்டணத்தை 50 சதவீதம் மெட்ரோ நிறுவனம் உயர்த்தியது.

இதனால் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது; வருவாயும் குறைகிறது.

வெளிநாடு


இச்சூழ்நிலையில், மெட்ரோ நிறுவனம் தேவையற்ற செலவுகள் செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மெட்ரோ தொழில்நுட்ப அதிகாரிகள், ஆய்வு செய்வதற்காக வெளிநாடுகளுக்கு செல்வது சகஜம்.

ஆனால் தொழில்நுட்ப உபகரணங்களை ஆய்வு செய்யும் பெயரில், மெட்ரோ நிறுவன நிதிப்பிரிவு அதிகாரி ஒருவர், சமீபத்தில் தன் மனைவியுடன் ஜெர்மனிக்கு சென்றார். இது சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையே மெட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு, 5 கோடி ரூபாய் செலவில் ஹை டெக் சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதற்கு பெங்களூரு மெட்ரோ நிறுவன ஊழியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதி, அதிருப்தி தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ நிறுவன இயக்குநர், செயல் நிர்வாக இயக்குநர் உட்பட உயர் அதிகாரிகள் பயன்பாட்டுக்கு 10க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதற்காக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டது.

மக்களின் வரிப்பணத்தை அதிகாரிகள், தங்களின் சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்துவது சரியல்ல. கார்கள் வாங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

போனஸ் எங்கே?


மக்களின் வரிப்பணம் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். நாட்டின் மற்ற மெட்ரோ நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, போனஸ் வழங்குகின்றன.

ஆனால் பெங்களுரு மெட்ரோ நிறுவனம், தன் ஊழியர்களுக்கு எந்த சலுகையும் அளிப்பது இல்லை.

எங்களுக்கு போனஸ் கொடுக்காமல், அதிகாரிகள் தங்களின் விருப்பம் போன்று, சொகுசு கார்களை வாங்கி உள்ளனர்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ரயில்களில் விளம்பரம்

பயணியர் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு, பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வருவாயை பெருக்கும் நோக்கில், விளம்பரங்கள் பொருத்த டெண்டர் அறிவித்துள்ளது.மெட்ரோவின் பச்சை நிற பாதையின் பத்து ரயில்கள், ஊதா நிற பாதையின் 10 ரயில்கள் மீது, விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்படும். 57 ரயில்களின் உட்புறத்தில் விளம்பரம் செய்யலாம். இதனால் ஆண்டுதோறும், மெட்ரோ நிறுவனத்துக்கு 27 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us