ADDED : மார் 15, 2025 04:09 AM

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டம், போட்வாட் ரயில் நிலையம் அருகே கைவிடப்பட்ட ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இதன் அருகே வாகனப் போக்குவரத்துக்கான மேம்பாலம் கட்டப்பட்டதால், இந்த லெவல் கிராசிங் பயன்பாட்டில் இல்லை.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் லாரி ஒன்று கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக சென்றது. மேம்பாலம் மீது ஏறாமல் குறுக்கு வழியில் செல்வதற்காக, லாரியை ரயில்வே கிராசிங்வழியாக டிரைவர் இயக்கினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி லெவல் கிராசிங்கை உடைத்து கொண்டு தண்டவாளத்துக்கு நடுவே சென்று நின்றது. அந்த சமயத்தில் அவ்வழியே மும்பை - அமராவதி பயணியர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதனால், லாரியை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
ரயில் இன்ஜின் டிரைவர் சில மீட்டருக்கு முன்னரே பிரேக் பிடித்த போதும், ரயில் மோதி லாரி இரண்டு துண்டானது. ரயிலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. பயணியரும் காயமின்றி தப்பினர்.
இந்த விபத்து காரணமாக நேற்று அவ்வழித்தடத்தில் ரயில் சேவை ஆறு மணி நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர். அந்த லாரியில், 'என்றும் அன்புடன்' என, தமிழில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், சகுந்தலா, வேலன் என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே, இது தமிழகத்தைச் சேர்ந்த லாரியாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.