'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: உ.பி., முடிவு
'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: உ.பி., முடிவு
'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: உ.பி., முடிவு
ADDED : ஜூலை 31, 2024 02:11 AM

புதுடில்லி, உத்தர பிரதேசத்தில், 'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் அல்லாத பெண்களை, இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் காதலித்து திருமணம் செய்வது, 'லவ் ஜிஹாத்' எனப்படுகிறது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே சட்டம் அமலில் உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டம் -- 2024 ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்நிலையில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில், சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சட்டத்திருத்த மசோதாவை, சட்டசபையில் மாநில அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.
நாளை மறுதினம் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ., அரசின் இந்த முடிவை, பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி விமர்சித்துள்ளது.
“சமூகத்தில் பகைமையை உருவாக்கும் நோக்கில், லவ் ஜிஹாத் தில் பா.ஜ., அரசு திருத்தம் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான அக்கட்சியின் வெறுப்புணர்வு தெளிவாக தெரிகிறது.
''பா.ஜ.,வின் பிளவுபடுத்தும் அரசியல் வெற்றி பெறாது,” என, சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் பக்ருல் ஹசன் சந்த் தெரிவித்துள்ளார்.