l லோக்சபா தேர்தல் முடிவு குறித்து பல லட்சம் ரூபாய்க்கு... l வாரிசுகளின் எதிர்காலம் பற்றி காங்., தலைவர்கள் கவலை
l லோக்சபா தேர்தல் முடிவு குறித்து பல லட்சம் ரூபாய்க்கு... l வாரிசுகளின் எதிர்காலம் பற்றி காங்., தலைவர்கள் கவலை
l லோக்சபா தேர்தல் முடிவு குறித்து பல லட்சம் ரூபாய்க்கு... l வாரிசுகளின் எதிர்காலம் பற்றி காங்., தலைவர்கள் கவலை
ADDED : ஜூன் 03, 2024 04:40 AM
பெங்களூரு : 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்' என்ற கருத்து கணிப்பால், மாநிலத்தின் பல தொகுதிகளில், வேட்பாளர்கள் வெற்றி குறித்து, பல லட்சம் ரூபாய்க்கு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், வாரிசுகளை களமிறக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கவலையில் உள்ளனர்.
இம்முறை நாட்டில் ஏழு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடந்தது. கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7ல் இரண்டு கட்டங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. இத்தேர்தலில், தங்கள் கட்சி தலைவர் வெற்றி பெறுவார் என காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சி ஆதரவாளர்கள், டிராக்டர், நிலம் போன்றவற்றை பந்தயம் வைத்துள்ளனர்.
தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது. மோடியே மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் எனவும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்கனவே, பந்தயம் கட்டியவர்கள், பந்தய தொகையை லட்சக்கணக்கில் உயர்த்தி உள்ளனர். குறிப்பாக, பெங்களூரு ரூரல், மாண்டியா உட்பட பல தொகுதிகளில் பந்தயம் நடக்கிறது.
பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத், துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் போட்டியிட்டுள்ளனர். இங்குள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், ஐந்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற மூன்று தொகுதிகளில் பா.ஜ., இரண்டிலும்; ம.ஜ.த., ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளதால், மற்ற தொகுதிகளிலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கருதுகின்றனர்.
இதுபோன்று, மாண்டியாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக குமாரசாமியும், காங்கிரசின் வெங்கடரமண கவுடா என்ற 'ஸ்டார்' சந்துரு போட்டியிட்டுள்ளனர்.
நில பத்திரங்கள்
ஆனாலும், பெங்களூரு ரூரல் தொகுதி உள்ள ராம்நகர் மாவட்டத்தில், குமாரசாமி வெற்றி பெற வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய், வாகனங்கள், சில இடங்களில் நில பத்திரங்கள் கூட வைத்து பந்தயம் கட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், கர்நாடகாவின் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை நாளை நிர்ணயிக்கும் என்பதால், நடுங்கும் இதயத்துடன் காத்திருக்கின்றனர்.
கர்நாடகாவில் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., என மூன்று முக்கிய கட்சிகளிலும் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இதனால் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள், குடும்ப அரசியலை பற்றி விமர்சிக்க முடியாத சூழ்நிலைக்கு, கர்நாடக அரசியல் வந்துள்ளது.
கர்நாடாவின் 28 லோக்சபா தொகுதிகளில், 19 தொகுதிகளில் அரசியல் தலைவர்களின் வாரிசுகளே போட்டியிட்டுள்ளனர். ஏற்கனவே அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டு, பல பதவிகளை திகட்ட, திகட்ட அனுபவித்த தலைவர்களே, தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல், தங்களின் மகன், மகள், மருமகன், மனைவியை களமிறக்கினர். மேலிடத்திடம் முட்டி, மோதி, மன்றாடி தங்கள் வாரிசுகளுக்கு சீட் பெற்று தந்தனர். சூறாவளியாக சுற்றி வந்து பிரசாரமும் செய்தனர்.
'திக் திக்' இதயம்
பா.ஜ., சார்பில் ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, தாவணகெரேவில் எம்.பி., சித்தேஸ்வரின் மனைவி காயத்ரிக்கும் சீட் கொடுத்தது.
மாண்டியாவில் ம.ஜ.த., சார்பில் குமாரசாமி, ஹாசனில் அவரது அண்ணன் மகன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகின்றனர். குடும்ப வாரிசுகள் போட்டியிட்டதில், காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால் பெரிதும் கலக்கத்தில் இருப்பது காங்கிரஸ் தலைவர்கள் தான். பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் ஐஸ்வர்யா, சிக்கோடியில், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள், பெலகாவியிலும், அமைச்சர் மல்லிகார்ஜுனாவின் மனைவி பிரபா, பெங்களூரு தெற்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவும்யா, ஷிவமொகாவில், அமைச்சர் மதுபங்காரப்பாவின் சகோதரி கீதாவும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றால் தான், அரசியலில் எதிர்காலத்தில் தாக்கு பிடித்து நிற்க முடியும் என்பதால், தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, இந்த தலைவர்கள், 'திக் திக்' இதயத்துடன் காத்திருக்கின்றனர்.