விவசாய அமைச்சராக விரும்பும் குமாரசாமி
விவசாய அமைச்சராக விரும்பும் குமாரசாமி
விவசாய அமைச்சராக விரும்பும் குமாரசாமி
ADDED : ஜூன் 05, 2024 11:27 PM

பெங்களூரு: டில்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும்படி, ம.ஜ.த., மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார்.
இதன்படி, நேற்று காலை டில்லி புறப்படுவதற்கு முன், பெங்களூரில் குமாரசாமி கூறுகையில், ''மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி,'' என்றார்.
டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், அவர் பங்கேற்றார். அப்போது, தனக்கு மத்திய விவசாய துறை அமைச்சர் பதவி தரும்படி அவர் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆலோசனை கூட்டத்துக்கு பின் குமாரசாமி கூறுகையில், ''அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி கூறினார். அமைச்சர் பதவி குறித்து ஆலோசிக்கப்படவில்லை. நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அது தொடர்பாக பேசவில்லை. எனக்கு விவசாய துறை அமைச்சர் பதவி தருவதாக கூறுவது வெறும் வதந்தி,'' என்றார்.
ஆனாலும், குமாரசாமிக்கு விவசாய துறை அமைச்சர் பதவி மீது விருப்பம் என்று தன் ஆதரவாளர்களுடன் தெரிவித்துள்ளார். இதன்படி, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தெரிகிறது.