குமார் பங்காரப்பா வீடு முற்றுகை சிவராஜ்குமார் ரசிகர்கள் போராட்டம்
குமார் பங்காரப்பா வீடு முற்றுகை சிவராஜ்குமார் ரசிகர்கள் போராட்டம்
குமார் பங்காரப்பா வீடு முற்றுகை சிவராஜ்குமார் ரசிகர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 09, 2024 03:51 AM

பெங்களூரு, ; 'எங்கள் ஊரில் நடக்கும், திருவிழாவில் நடனமாட நடிகர் சிவராஜ்குமார் விண்ணப்பிக்கட்டும்' என கிண்டல் அடித்த, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குமார் பங்காரப்பா வீட்டை முற்றுகையிட்டு, சிவராஜ்குமார் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பா பிள்ளைகள் குமார் பங்காரப்பா, 60, கீதா, 59, மது பங்காரப்பா, 57. இவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான குமார் பங்காரப்பா பா.ஜ.,விலும், மற்ற இருவரும் காங்கிரசில் உள்ளனர்.
மது பங்காரப்பா, மாநில பள்ளி துறை கல்வி அமைச்சராக உள்ளார். கீதா, மது ஆகியோரிடம் குமார் பங்காரப்பா பேசுவது இல்லை.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் ஷிவமொகா லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கீதா, தோல்வி அடைந்தார். கீதாவுக்காக அவரது கணவரும், பிரபல நடிகருமான சிவராஜ்குமார் பிரசாரம் செய்தார்.
இதுகுறித்து குமார் பங்காரப்பா தனது முகநுால் பதிவில், 'சிவராஜ்குமார் இப்போது வேலை இல்லாமல் இருப்பார் என்று நினைக்கிறேன். எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாவில் நடனம் ஆட விண்ணப்பிக்கட்டும்' என்று கூறி இருந்தார். இந்த பதிவு, சிவராஜ்குமார் ரசிகர்களின் கோபத்தை துாண்டி உள்ளது.
பெங்களூரு, சதாசிவநகரில் உள்ள குமார் பங்காரப்பா வீட்டை முற்றுகையிட்டு, சிவராஜ்குமாரின் ரசிகர்கள் நேற்று காலை போராட்டம் நடத்தினர். வீட்டிற்குள் செல்லவும் முயன்றனர்.
இதுபற்றி அறிந்த சதாசிவநகர் போலீசார் அங்கு சென்று, சிவராஜ்குமார் ரசிகர்களிடம் பேச்சு நடத்தினர்.
'குமார் பங்காரப்பாவின் பதிவு, எங்களை காயப்படுத்தி உள்ளது. அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் கேட்கவில்லை.
இதனால் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த போலீசார், வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.