சிவசமுத்திரா, ஜோக் நீர்வீழ்ச்சிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., 'பேக்கேஜ் டூர்'
சிவசமுத்திரா, ஜோக் நீர்வீழ்ச்சிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., 'பேக்கேஜ் டூர்'
சிவசமுத்திரா, ஜோக் நீர்வீழ்ச்சிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., 'பேக்கேஜ் டூர்'
ADDED : ஜூலை 17, 2024 09:28 AM

பெங்களூரு : தொடர் மழை எதிரொலியால், சிவசமுத்திரா, ஜோக் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்க்கும் வகையில், கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பல பகுதிகளில் தினமும் மழை பெய்கிறது. இதனால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஆங்காங்கே அருவிகள் உருவாகி உள்ளன. ஏற்கனவே உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை பார்க்க சுற்றுலா பயணியர் படையெடுத்துள்ளனர்.
அருவியில் தண்ணீர்
கபினி அணை நிரம்பி, அதிகபட்ச உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மாண்டியாவின் மலவள்ளியில் உள்ள சிவசமுத்திரா எனும் பரசுக்கி, ககனசுக்கி அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது போன்று, ஷிவமொகாவின் சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியிலும் சராவதி ஆற்று நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து, கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில், பரசுக்கி, ககனசுக்கி, ஜோக் நீர்வீழ்ச்சிகளுக்கு சிறப்பு சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூரில் இருந்து, காலை 6:30 மணிக்கு பரசுக்கி, ககனசுக்கி அருவிகளுக்கு பஸ் புறப்படும். வழியில் சோம்நாத்பூர் புராதன கோவில், தலக்காடு பஞ்சலிங்க கோவில்கள் தரிசனம், ரங்கநாதசாமி கோவிலுக்கும் பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். மத்துாரில் சிற்றுண்டியும், தலக்காடுவில் மதிய உணவும் வழங்கப்படும்.
அருவியை பார்த்த பின், மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு பெங்களூருக்கு அழைத்து வரப்படுவர். பெரியோருக்கு தலா 500 ரூபாயும்; சிறார்களுக்கு தலா 350 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் இந்த சுற்றுலா பேக்கேஜ் ஆரம்பிக்கப்படுகிறது.
சிற்றுண்டி
இதுபோன்று, வரும் 19ம் தேதி முதல், வெள்ளி, சனிக்கிழமைகளில், பெங்களூரில் இருந்து, இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை ஜோக் நீர்வீழ்ச்சிக்கு பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். வழியில் கெலதி கோட்டை பார்க்கலாம். சாகரில் சிற்றுண்டி வழங்கப்பட்டு, பின் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்க்கலாம்.
பின், அங்கேயே மதிய உணவு சாப்பிட்ட பின், ஷாப்பிங் செய்ய அழைத்து செல்லப்படுகின்றனர்.
இரவு உணவுக்கு பின், இரவு 10:00 மணிக்கு சாகரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு பெங்களூருக்கு அழைத்து
வருகின்றனர்.
பெரியோருக்கு தலா 3,000 ரூபாயும்; சிறார்களுக்கு தலா 2,800 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.