Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கின்னல் கலையை பாதுகாக்கும் கொப்பால் வாலிபர்

கின்னல் கலையை பாதுகாக்கும் கொப்பால் வாலிபர்

கின்னல் கலையை பாதுகாக்கும் கொப்பால் வாலிபர்

கின்னல் கலையை பாதுகாக்கும் கொப்பால் வாலிபர்

ADDED : ஜூலை 07, 2024 03:27 AM


Google News
Latest Tamil News
கின்னல் பொம்மைக்கு வண்ணம் பூசும் சந்தோஷ் குமார். (அடுத்த படம்) பெங்களூரு விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சந்தோஷ் குமார் வடிவமைத்த சிலைகள். (கடைசி படம்) பயிற்சி பெறும் மாணவர்கள்.

கொப்பால் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கங்காவதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தான். அங்கு தயாரிக்கப்படும் கின்னல் பொம்மைகள், கைவினைப் பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.

கின்னல் கலை, 500 ஆண்டுகள் பழமையானது. விஜயநகர பேரரசர் காலத்தில் ஹம்பியில் கட்டப்பட்ட பல கோவில்களின் மேற்கூரையில் பதிக்கப்பட்டு உள்ள சிற்பங்கள், கின்னல் கலையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை தான்.

கின்னல் பொம்மைகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு இலகுரக மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மரக்கட்டைகளை சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் ஊற வைக்கப்படுகிறது.

பின்னர் மரத்துண்டுகளை அரைத்து துாள் துாளாக மாற்றுகின்றனர். அதனுடன் தண்ணீர் சேர்த்து மண் போன்று பிடிக்கின்றனர். அதன் பின்னர் அதில் இருந்து பொம்மைகள், கைவினைப் பொருட்கள் செய்ய உருவம் செய்கின்றனர். அதில் பெயின்ட் அடிக்கின்றனர். பின்னர் நன்கு காய வைத்து விற்பனை செய்கின்றனர்.

கொப்பால் அருகே கின்னல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்போருக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பதுதான் தொழிலாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக தொழில் நலிவடைந்து வருவதால், பெரும்பாலானோர் வேலை தேடி பெங்களூரு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ஆனாலும் கின்னல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 30, என்பவர், கின்னல் கலை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைக்கிறார்.

இவர் மனம் திறந்து கூறியதாவது...

எனது தந்தை ஆஞ்சநேயா. தாய் சைலஜா. இருவரும் கின்னல் பொம்மைகள், கைவினைப்பொருட்கள் தயாரித்து வருகின்றனர். எனக்கும் பொம்மைகள், கைவினைப்பொருட்கள் தயாரிக்க ஆசை இருந்தது. ஆனால் என்னை ஐ.டி.ஐ., கல்லூரியில் சேர்த்துவிட்டனர்.

ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே படித்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன். தற்போது பெற்றோருடன் இணைந்து கின்னல் பொம்மைகள், கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகின்றேன்.

மகாபாரதம், ராமாயண காலத்தின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அவற்றை படித்துத் தெரிந்து கொண்டேன். அதில் வரும் கதாபாத்திரங்களை ஓவியமாக வரைந்தேன். அந்த ஓவியங்களை பயன்படுத்தி கின்னல் கைவினைப் பொருட்கள் தயாரித்து உள்ளேன்.

நான் தயாரித்து உள்ள ஏஞ்சல் பொம்மைகள், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கருடா சிலையை தயாரித்தேன். இது, பெங்களூரு கேசம வனத்தில் உள்ளது. அமர்ந்திருக்கும் நிலையில் ரதி, மன்மதன் சிலைகளை தயாரித்தேன். இதற்காக எனக்கு 'கர்நாடக ஷில்ப கலா விருது' கிடைத்தது.

எங்கள் ஊரில் கின்னல் பொம்மைகள் தயாரித்து வந்தவர்கள் தற்போது, வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர்.

கின்னல் கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதனால் எனக்கு தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். இதுவரை 250 பேருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.-- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us