Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கல்லத்திகிரி

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கல்லத்திகிரி

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கல்லத்திகிரி

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் கல்லத்திகிரி

ADDED : ஜூன் 12, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
சிக்கமகளூரு பெயரை கேட்டாலே, கமகமக்கும் காபி தோட்டங்கள், உயரமான மலைப் பகுதியில் இருந்து, பூமியை முத்தமிட பாய்ந்து வரும் நீர் வீழ்ச்சி என, பல காட்சிகள் கண் முன்னே வந்து செல்லும். இவற்றில் கல்லத்திகிரி நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.

மலைப்பகுதிகள் நிறைந்த சிக்கமகளூரு மாவட்டத்தில், நீர் வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன. மழைக்காலத்தில் பேரிரைச்சலுடன் கீழே பாய்ந்து வரும் நீர் வீழ்ச்சியை காண்பதும், ரசிப்பதும் அற்புதமான அனுபவம்.

இந்த அனுபவத்தை உணர்வதற்காகவே, சுற்றுலா பயணியர் குவிகின்றனர். இத்தகைய நீர் வீழ்ச்சிகளில், கல்லத்திகிரி நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.

சிக்கமகளூரு, தரிகெரேவின், லிங்கதஹள்ளி அருகில் கல்லத்திகிரி நீர் வீழ்ச்சி உள்ளது. கோடை காலத்தில் நீர் வரத்து குறைவாக இருந்தது.

கெம்மண்ஹுன்டி மலையில் கன மழை பெய்தால், நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதை காண சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.

கல்லத்திகிரி சிக்கமகளூரின், முக்கியமான சுற்றுலா தலமாகும். சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால், நீர் வீழ்ச்சி களையிழந்து காணப்பட்டது. சுற்றுலா பயணியரும் அவ்வளவாக வரவில்லை. இப்போது மழை பெய்வதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றிலும் பசுமையான வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது.

அமைதியான சூழ்நிலையில், நண்பர்களுடன், குடும்பத்துடன் பொழுது போக்க தகுதியான இடமாகும். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர், பெருமளவில் வருகின்றனர். காலை முதல் மாலை வரை, நீர் வீழ்ச்சியில் விளையாடி பொழுது போக்கிவிட்டு திரும்புவர்.

உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். நீர் வீழ்ச்சியை போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். வெள்ளம் பாய்ந்தோடும் போட்டோ, வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இதை பார்த்து, நீர்வீழ்ச்சியை காண வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நீர் வீழ்ச்சியை ஒட்டியபடியே, புராதனமான வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், புனித நீராடி வீரபத்ரேஸ்வர சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

தற்போது நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு அதிகம் இருப்பதால், கோவிலுக்கு செல்ல முடிவதில்லை.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us