'ஸ்கூபா டைவிங்'கில் ஆர்வமா? கர்நாடகாவுக்கு வரலாம்!
'ஸ்கூபா டைவிங்'கில் ஆர்வமா? கர்நாடகாவுக்கு வரலாம்!
'ஸ்கூபா டைவிங்'கில் ஆர்வமா? கர்நாடகாவுக்கு வரலாம்!
ADDED : ஜூன் 12, 2024 11:04 PM

சந்தன மரங்களுக்கு பெயர் போன கர்நாடகாவில், சுற்றுலா தலங்களுக்கு பஞ்சம் இல்லை. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவுக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகமாகிறது.
பசுமையை ரசிக்க மேற்கு தொடர்ச்சி மலைகளும்; வனவிலங்குகளை பார்க்க புலிகள் காப்பகங்கள், தேசிய பூங்காக்கள்; வரலாற்றை அறிய, புராதன நினைவு சின்னங்கள்; மலை ஏறுபவர்களுக்கு ஏற்ற மலைகள் இப்படி ஒவ்வொன்றிற்கும் பல இடங்களை கூறலாம்.
குழந்தைகள் முதல், பெரியோர் வரை பார்த்து ரசித்து மகிழ கூட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த வகையில், சிலருக்கு நீர் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதுவும் நீரில் விளையாட இளைஞர்களுக்கு கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம்.
விடுமுறை கிடைத்தால் போதும், நண்பர்களுடன் அருவி, ஆறு, கடல் பகுதிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அதிலும் அவ்வப்போது ஸ்கூபா டைவிங் எனும் கடலில் மூழ்கி அனுபவிக்கும் சாகசம் செய்வதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
கர்நாடகாவை பொறுத்தவரையில், உத்தர கன்னடா மாவட்டத்தின், முருடேஸ்வரா, கோகர்ணா; உடுப்பி மாவட்டத்தின், காபு, குந்தாபுரா; தட்சிண கன்னடாவின் மங்களூரு என பல இடங்களில், சுற்றுலா பயணியருக்கு ஸ்கூபா டைவிங் செய்யப்படுகின்றன.
கடற்கரையில் இருந்து, அரபி கடலில் படகில் அழைத்து சென்று, குறிப்பிட்ட சிறிய தீவுகளில் இறக்கி விடுகின்றனர். அங்கு உரிய பாதுகாப்புடன், ஸ்கூபா டிவைங் செய்விக்கப்படுகின்றனர். 15 முதல், 20 நிமிடங்கள் கடலில் இருக்கலாம்.
கடலுக்கு அடியில் சென்று, மீன்கள் உட்பட கடல் வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும் பார்க்கலாம். இது மனதிற்கு புத்துணர்ச்சியையும், புதிய அனுபவத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்கூபா டைவிங் செய்யும் போது, கடலில் எப்படி செயல்பட வேண்டும். என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்படும். அதன்படி செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
வாழ்க்கையில் ஒருமுறையாவது ஸ்கூபா டைவிங் செய்து, கடல் அனுபவத்தை பெறுவது நல்லது என்றே சொல்லலாம். தனியார் சார்பில் நடத்தப்படுகிறது என்பதால், இடத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பர்.
ஒரு நபருக்கு, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். நமக்கு அவர்களே படம், வீடியோ எடுத்து மொபைல் போனுக்கு அனுப்பி விடுவர்.
- நமது நிருபர் -