வட மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் மஹாபலேஸ்வரா கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்
வட மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் மஹாபலேஸ்வரா கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்
வட மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் மஹாபலேஸ்வரா கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்
ADDED : ஜூன் 08, 2024 04:53 AM

கார்வார் : கர்நாடகாவின் வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கோகர்ணா மஹாபலேஸ்வரா கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, வடமாவட்டங்களான பாகல்கோட், விஜயபுரா, பீதர், ஹாவேரியில் மழை தீவிரம் அடைந்துள்ளது.
உத்தர கன்னடாவின் கோகர்ணாவில் நேற்று காலையில் இருந்து, மழை விடாமல் பெய்தது. இதனால் மஹாபலேஸ்வரா கோவிலுக்கு செல்லும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிறிது நேரத்தில் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. கருவறை முன் வரை தண்ணீர் தேங்கியது. கோவிலில் புகுந்த தண்ணீரை, கோவில் ஊழியர்கள் வெளியேற்றினர். இதனால் ஒரு மணி நேரம் ஆத்ம லிங்கத்தை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அவதி அடைந்தனர். தட்சிண கன்னடா, உடுப்பியிலும் மழை பெய்தாலும் பாதிப்பு எதுவும் இல்லை.
திராட்சை சேதம்
விஜயபுராவின் தி.கோட்டா, பபலேஸ்வர், பசவன பாகேவாடி ஆகிய தாலுகாக்களில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்தது. இதனால் பல நாட்களுக்கு பின்பு, கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் தேங்கியது.
தி.கோட்டாவின் கோனாசாகி கிராமத்தில் மஹாதேவ் என்பவருக்கு சொந்தமான, திராட்சை தோட்டத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் திராட்சை கொடிகள் சேதம் அடைந்தன. ஹாவேரியின் ராணிபென்னுார் நகரில் பெய்த கனமழையால், மார்க்கெட் பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல, பெருக்கெடுத்து ஓடியது. காய்கறி கடைகள் முன் வைக்கப்பட்டு இருந்த, காய்கறிகள் இருந்த கூடைகள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பாகல்கோட்டின் ரபகவி பனஹட்டி, பாதாமி, ஹுன்குந்த், பாகல்கோட் உள்ளிட்ட பகுதிகளில், கனமழை பெய்தது. சில கிராமங்களில் வீடுகள் இடிந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. பீதரின் அமலாபுரா, சித்தவாடி, கோரநல்லி, கோடம்பள்ளி, மண்ணள்ளி, கங்காட்டி கிராமங்களில் கனமழை பெய்தது.
பெங்களூரிலும் நேற்று சிவாஜிநகர், கே.ஆர்.சதுக்கம், கன்டோன்மென்ட், வசந்த்நகர் உள்ளிட்ட சில பகுதிகளில், மிதமான மழை பெய்தது.
'ஆரஞ்சு அலெர்ட்'
இந்நிலையில் பெலகாவி, தார்வாட், ஹாவேரி, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'டும், கலபுரகி, விஜயபுரா, பாகல்கோட், கொப்பால், கதக், ஷிவமொகா, சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, குடகு, கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்'டும் விடுவிக்கப்பட்டு உள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ., முதல் 60 கி.மீ., வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் வானம் மேகமூட்டமாக இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.