பயங்கரவாதிக்கு கனடா பார்லி.,யில் அஞ்சலி கனிஷ்கா தாக்குதலை சுட்டிக்காட்டியது இந்தியா
பயங்கரவாதிக்கு கனடா பார்லி.,யில் அஞ்சலி கனிஷ்கா தாக்குதலை சுட்டிக்காட்டியது இந்தியா
பயங்கரவாதிக்கு கனடா பார்லி.,யில் அஞ்சலி கனிஷ்கா தாக்குதலை சுட்டிக்காட்டியது இந்தியா
ADDED : ஜூன் 20, 2024 01:11 AM
புதுடில்லி, காலிஸ்தான் பயங்கர வாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, கனடா பார்லிமென்டில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கனிஷ்கா விமான தாக்குதலை நம் துாதரகம் சுட்டிக் காட்டியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், அந்த நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூன் 18ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளது என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.
இதனால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் இத்தாலியில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜஸ்டின் ட்ரூடோவையும் சந்தித்து பேசினார்.
பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளோம் என, ட்ரூடோ கூறியிருந்தார். ஆனால், பிரதமர் மோடி, இத்தாலியில் கனடா பிரதமரை சந்தித்தேன் என, ஒற்றை வரியில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு, கனடா பார்லிமென்டில் நேற்று முன்தினம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அந்த நாட்டு பார்லிமென்டின் சபாநாயகர், சபையில் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவின் வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் துாதரகம், சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 1985, ஜூன், 23ம் தேதி, மான்ட்ரீலில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம், 31,000 அடி உயரத்தில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 268 கனடா மக்கள், 27 பிரிட்டிஷார், 24 இந்தியர்கள் உட்பட, 329 பயணியர் கொல்லப்பட்டனர்.
நடுவானில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் பயங்கரவாத சம்பவமாக இது கருதப்படுகிறது.
இதன், 39வது ஆண்டு நினைவையொட்டி, வான்கூவரில் உள்ள துாதரகதத்தில், நினைவு அஞ்சலி, 23ம் தேதி நடத்தப்படுகிறது. இதில், இந்தியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்களை எதிர்ப்பதில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்போர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.