இந்தியா நானோ தொழில்நுட்ப மாநாடு; ஆகஸ்ட் 1ல் பெங்களூரில் துவக்கம்
இந்தியா நானோ தொழில்நுட்ப மாநாடு; ஆகஸ்ட் 1ல் பெங்களூரில் துவக்கம்
இந்தியா நானோ தொழில்நுட்ப மாநாடு; ஆகஸ்ட் 1ல் பெங்களூரில் துவக்கம்
ADDED : ஜூலை 02, 2024 09:35 PM

பெங்களூரு : பெங்களூரில், 13வது இந்தியா நானோ மாநாடு - 2024, ஆகஸ்ட் 1, 2, 3ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நானோ தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், பெங்களூரில் 12 முறை நானோ தொழில்நுட்ப மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் போதும், ஆன்லைன் வாயிலாக மாநாடு நடத்தப்பட்டது. தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் நேரடியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் போசராஜு, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பெங்களூரு இந்தியா நானோ மாநாடு - 2024, ஆகஸ்ட் 1, 2, 3ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடக அறிவியல், தொழில்நுட்ப துறை, கர்நாடக அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு சங்கம், ஜவஹர்லால் நேரு மேம்பட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
பருவ நிலை மாற்றம், குறைந்து வரும் எரிபொருட்கள், சுகாதார பிரச்னைகள் போன்ற பிரச்னைகள், மனிதகுலம் தற்போது சந்தித்து வரும் மிக பெரிய சவாலாக உள்ளது.
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள் தான் அதிகமாக உள்ளன. வெப்பம் அதிகரிப்பு, இயற்கை பேரிடர் சம்பவங்கள் நடக்கின்றன.
எரிபொருட்கள் உற்பத்தியால், இயற்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொரோனாவால் ஏற்படும் பின் விளைவுகள் சுகாதார துறை மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய தொற்று நோயின் ஆரம்பமும், முடிவும் இன்னும் தீர்மானிக்கவில்லை. எனவே எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வகையில், தொழில்நுட்பத்தை உருவாக்குவது அவசியம்.
இந்நிலையில், நானோ தொழில்நுட்பம் அளவில் சிறியதாக இருந்தாலும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நானோ தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில், இம்முறை, நானோ தொழில்நுட்ப மாநாட்டின் பிரதான கரு பொருளாக, பருவ நிலை மாற்றம், எரிபொருள் மற்றும் சுகாதார பாதுகாப்பு இருக்கும்.
இம்மாநாட்டில், 700க்கும் அதிகமான பிரதிநிதிகள், 25க்கும் அதிகமான கருத்தரங்குகள், 75க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டின் 175க்கும் அதிகமான இளைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட நவீன நானோ தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்படும்.
மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் பெயரில், நானோ அறிவியல் விருது வழங்கப்படும்.
முதல்வர் சித்தராமையா மாநாட்டை துவக்கி வைப்பார். துணை முதல்வர் சிவகுமார் மற்றும் விஞ்ஞானிகள், வெவ்வேறு துறை வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.