எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சு
எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சு
எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சு
ADDED : ஜூலை 05, 2024 01:31 AM

அஸ்தானா, கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க, இந்திய - சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில், 2020 மே மாதம், சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. அப்போது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. அதே நேரத்தில் மேலும் சில இடங்களில் படைகள் தொடர்ந்து முகாமிட்டு உள்ளன.
இந்நிலையில், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டுக்கு இடையே, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, எல்லை பிரச்னை தொடர்பாக இருவரும் விரிவாக பேசியதாக, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில், மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
இரு நாட்டுக்கும் இடையேயான உறவு ஸ்திரமாகவும், நீடித்து இருக்கவும், எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம்.
பரஸ்பரம் மரியாதை, முன்னுரிமைகள், தீவிர தன்மையை மனதில் வைத்து இந்த பிரச்னையை கையாள வேண்டும்.
அந்த வகையில், கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
முழு முன்னுரிமை கொடுத்து இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, இரண்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.